Dec 11, 2017

தூக்கம் என் கண்களை,,,,,,

பெய்தது மழையாகவும் பார்த்தது இவனாகவும் ஆகிப்போகிறார்கள்.முன்னது அக்றினை,பின்னது உயிர்தினை எனக் கொள்ளலாம்தான்.

உயிர்தினையான இவன் காலைஎழுந்திருக்கும் போது சற்றே தாமதம் காட்டி விட்டுத்தான் எழுந்திருக்கிறான்,

முதல் நாள் இரவு தாமதமாகத்தான் தூங்கினான்.ஏன் தெரியவில்லை. இப்பொ ழுதுசமீப சமீபமாய் அப்படித்தான் ஆகிப்போகிறது.காரணம் ஏறிப் போன உடல் மூப்பா,இல்லை உடல் மூப்பு மற்றும் மன எண்ணங்களா தெரியவில்லை.

இது விஷயத்தில் கனியண்ணன் சொல்வதை கேட்டால் ஆச்சரியம் கலந்த ஐயப்பாடு கண்டிப்பாக இருக்கிறது,

நானெல்லாம்நல்லா தூங்கி வருசக்கணக்குல ஆச்சு சார் என்கிறார்,என்ன என நெருங்கிப்போய் கேட்டால் சொல்வதற்கு ஆயிரம் காரணமும்கதைகளும் கை வசமும் அவர் ஒட்டுப்போட்டு அணிந்திருக்கிற ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட் முழுவதுமாய்நிரப்பிவைத்திருக்கிறார்.

“பாசக்கார பைய புள்ளைக நெறஞ்சி இருக்குற ஊர்லதான் ஏன் பையனும் படிக்கிறான்,சொந்த பந்தமெல்லாம் அங்கிட்டுதான் சார்,என்ன பொழப்பு தேடி பல பக்கம் கை நீட்டுனவுங்களுக்கு அந்த பூமி செட்டாகிப் போக அங்கயே வேர் விட்டுட்டாங்க,விட்ட வேர இனி பிரிச்சி எடுத்துட்டு வர்றது ரொமப் செரமம் ,செரமம்ங்குறது ஒரு பக்கம் இருந்தாக்கூட ஏன் இனி போயி அப்பிடியெல்லாம் பிரிச்சி எடுத்துட்டு வரணும்ங்குறேன்,விட்ட வேரு விட்ட வேராவே இருக்க ட்டும் தளைச்சது தளைச்சதாவே இருக்கட்டும்,பூத்ததும் காய் ச்சதும், பிஞ்சிவிட்டு காய் வச்சி பழம் கனிஞ்சது கனிஞ்சதாவே இருக்கட்டும், அது பரப்புன நெனலும்அதுலவந்துஅடைச்சபலனடைஞ்சதும் பலனடைஞ்சதா வே இருக்கட்டும்ன்னு அவுங்கள எடம் பெயர்தாம அப்பிடியே விட்டுட்டோம்”

“அவுங்க பொழப்பு அவுங்க பழக்கம் வழக்கம் அவுங்க யேவாராம் அவுங்க தொழிலு, இப்பிடி பலது பலதா அவுங்க அங்க குடி கொண்டு இருக்குற போது அவுகளப் போயி இங்கிட்டு கயிறு கட்டி இழுத்துட்டு வந்தம்னா ஒன்னு இழுத் துட்டு வர்ற கயிறு அந்து போகும்,இல்லைன்னா அவுங்களுக்கு நம்மளால பொழப்பு குடுக்க முடியாம போயிரும் ,அதுனாலத்தான் நான் ஒரு நா ரெண்டு நாளு லீவு எடுத்துட்டு போயினாலும் பாத்துட்டு வந்துர்றது.,

”போனம்னா ஒடனே வர முடியுதா,,? பத்து குடும்பங்க இருக்கு,அங்கயே வீடுக ஒண்ணொன்னும் ஒவ்வொரு யெடத்துல,ஒரு நாளைக்கு ஒரு கும்பமுன்னு கை நனைச்சாக் கூட பத்து நாளு வேணும் ,பத்து நாளும் அங்க உக்காந்து திங்கிறதும் சந்தோசப்படுறதும் நல்லாத்தான் இருக்கும்,ஆனா நம்ம பொழப்பு ன்னு ஒண்ணு இருக்கா இல்லையா,அதக் கருதிதா அந்தந்த வீட்ல ஒரு காலு ஒரு மிதின்னு மிதிச்சிட்டு வந்துர்றது.

“அதுல பாத்தீங்கின்னா அவுங்களுக்கு ஏகப்பட்ட வருத்தம்.வேற,”நீயெல்லாம் வந்தா ஏங் வீட்டுல சாப்புடுவையா வைப்பையான்னு சண்டாளத்தனமா பேசு வாங்க,எல்லாத்துக்கும் சிரிச்சிக்கிட்டும் தலையாட்டிக்கிட்டும் சகிச்சிக்கிட்டும் போனதுக்கு அடையாளமா ஒரு டம்பளர் தண்ணிய குடிச்சிப்புட்டு வர வேண் டியதாப் போகும்.

”அதுலயும் சமயத்துல பிரச்சனையாகிப்போகும்,பிரச்சனையின்னா பிரச்சனை சமயத்துலதலைசுத்திவிழுகுறஅளவுக்கு வந்து பூதாகரமாயி நிக்கும். சாப்பாடு தான இதுல போயி என்ன பெரிய அளவுக்குன்னு நாம நினைக்கிறது அவுங்க ளுக்கு கௌரவப் பிரச்சனையாகிப் போகும்.இதுல நான் பெரிசு நீ பெரிசுன்னு ஆகிப்போறதும் கூட உண்டு,இப்பித்தான் நான் வருவேன்னு எனக்காக ஒரு விட்ல கறிச்சோறு சமைச்சி நான் தண்ணிப்பிரியர்ன்னு தெரிஞ்சி ஒரு குவார்ட்டர்பாட்டிலு வேற வாங்கி வச்சி காத்துக்கிட்டு இருந்துருக்காங்க, நான் எப்பயும் போல எல்லாரு வீட்டுக்கும் போயிட்டு நான் வாங்கிக் கொண்டு போனத குடுத்துட்டு அவுங்க எங்க வீட்லயெல்லாம் சாப்புடுவீங்களான்னு கொறை பட்டுக் கிட்டு இருக்கும் போதே அவுங்க பேச்சதாங்கிக் கிட்டு சைஸா தப்பிச்சி வந்து பஸ்ஸேறி வர்றதுக்குள்ள போது போதுன்னு ஆகிப் போச்சி,

பின்ன போற யெடங்கள்லயெல்லாம் சாப்புடணுன்னு சொன்னா முடியுமா சொல்லுங்க?

”இது போக நாம போற சொந்தக்காரவீடுகளுக்கு கைய வீசிக் கிட்டும் போக முடியாது.அதுல நாலு வீடு வசதி வாஞ்சவுங்களா இருப்பாங்க, நாலு வீடு கைக்கும் வாய்க்கும் பத்தாதவுங்களா இருப்பாங்க,இதெல்லாம் நமக்கு தெரிஞ் சிருக்க வாய்ப்பில்லதான்.இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவா ஒரு வீட்டு க்கு என்ன வாங்குறமோ அது போலவே பத்து வீட்டுக்கும் பார பட்சமில்லாம வாங்கீர்றது.எனக்கு அது ஒரு செலவுதான்னாலும் கூட பத்து வீட்டு சொந்த மும் என்னைய வாயாறா மனசார வாழ்த்தி கெயெடுத்து கும்புடும் போது நான்முழுக்கமுழுக்க பாக்கியம் பெற்றவனாகிப்போறேன் இல்ல அந்த வேளை யில,,/ அத விட வேறென்ன வேணும் சார் ஒருத்தனுக்கு,”அது எனக்கு கெடை க்குதுஅந்தஊருக்குப் போகும் போது.

“இது போக சாப்பாடு வேற,சாப்புடலைன்னா கோபம் வேற,நான் இதையெல் லாம் பெரிசா எடுத்துக்கிர்றதில்ல,

அப்பிடித்தான் பெரிசா எடுத்துக்கிறாம பத்து வீட்டுல எல்லார் வீட்டுக்கும் போற மாதிரி எனக்காக கறியும் பாட்லும் வாங்கி வச்சிருந்த வீட்டுக்கும் ப்போயிட்டு வந்துட்டேன்.அவுங்க எவ்வளவு சொல்லியும் கூட சாப்புட மறுத்து வந்துட்டேன்.

அவருஎனக்கு தம்பி மொறை வேணும் ,என்ன தம்பிஎப்பிடியிருக்கீங்க, நல்லா யிருக்கீங்களாங்குற பேச்சுக்கு மறு பேச்சு பேசா தவரு,அந்த ஊர்க்காரருதான், மரியாதையானவரு,நான்அங்கபோயி யெறங்குறேன்னாஅவருஊர்லஇருந்தா வந்துருவாரு,பஸ்டாண்டுக்கு,தொழில்லஇருக்குறநெளிவுசுளிவுகளையும்மத்த மத்ததுகளையும் ஏங்கிட்டகேட்டுத் தெரிஞ்சிக்கிருவாரு.அதுல நான் சொல்றத கவனத்துல எடுத்துக்கிட்டு அவரோட சொந்த ஐடியாவையும் சேத்து நல்லா பிரமாதமாபண்ணுவாரு.

“அவருகட்டுனது என்னோட சொந்தக்கார பொண்ணு,அந்த பொண்ணுக்கு எங்க ஊருதான். அதுக்கு ஒரு ஆசை ,எனக்கு வாக்கப்பட்டணும்ன்னு.இது எனக்கு தெரியாது, அதும் யாருகிட்டயும் சொல்லாம அந்த ஆசைய மனசுல வச்சிக் கிட்டேஇருந்துருக்கு.பூட்டிவைச்சஆசைக்கு றெக்க மொளச்சி சிறகடிச்ச மாதிரி அப்பப்ப அது பறந்து வந்து என்னய சுத்தி வர்றதுண்டு,இது தெரியாத தத்தியா இருந்துருக்கேன் நானு, ஒண்ணு அந்தப்பொண்ணாவது ஏங்கிட்ட சொல்லீரு க்கணும்,இல்ல யார் மூலமாவது சொல்லிஜாடைமாடையா தெரியப்பண்ணீரு க்கணும்,

“எனக்கு எங்க மாமா பொண்ணு மேல ஒரு கண்ணு,அவரு பாத்தா இப்பயே வேணாலும் வீட்டுல கூட்டிக்கொண்டு போயி வச்சிக்கம்பாரு.அப்பிடி அவரு சொல்லும் போது பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் விவரம் தெரியாத வயசு,

”பிற்பாடு விவரம் தெரிஞ்சப்பெறகு அவரும் ஏங்மாமாவும் ஏங்கிட்ட அப்பிடி சொல்றதில்ல, நானும் அவருகிட்ட பெரிசா இது பத்தி ஒண்ணும் கேட்டுக் கிர்றதில்ல,ஏதோ அந்த நேரம் சொல்லீருக்காரு,, எனக்கும் கட்டுனா அந்தப் பொண்ணத்தான் கட்டணும் இல்லைன்னா வேற யாரையும் கட்டக் கூடாது ங்குறஅளவுக்கு முடிவெல்லாம் கெடையாது,மனசுல ஒரு மூளையில இருந்த சின்னதான ஆசை,அவ்வளவுதான்.

இத மாமாகிட்ட யாரோ சொன்னப்ப பாப்போம் என்ன இப்ப அவசரம், முன்னா டி சின்ன வயசுல ஏதோ சொன்னதுதான்,அதுக்காக அதையே செய்யணும்மு ன்னு கட்டாயமா என்னன்னுஎங்க மாமா சொல்லும் போதே என்னைய விரும் புன பொண்ணுஜாடை மாடையா சொல்லீருந்தாக்கூட நான் அவளையே கட்டீ ருப்பேன்,

“எனக்கு என்னான்னாஎன்னையும் விரும்புறதுக்கு அந்த நேரத்துல ஒரு ஆளு இருந்துக்கேன்னு ஒரு சந்தோஷம்தான் பாத்துக்கங்க,ஆனா அந்த சந்தோசம் என்னைய வந்து தொத்திக்கிறதுங்குள்ள எனக்கு கல்யாணம் முடிஞ்சி புள்ள குட்டிகள்ன்னு ஆகிப் போச்சி,

நான் ஒண்ணும் பெரிய வசதியான வீட்டுப்புள்ள கெடையாது, என்னவோ கைக்கும் வாய்க்கு பத்தாத கூலிக்காரந்தான் வருசமெல்லாம் கூலிக்கு அலை ஞ்சேஅலுத்துப் போவேன். இருந்தாலும்பெரிசா ஒண்ணும் கொறைவில்லை. பத்தாக் கொற பொழப்பும் கெடையாது, உள்ளூர்லவேலை இல்லாத நேரத்துல டவுனுக்கு வேலைக்குப் போயிருவேன்.

“இந்தஊர்ல ஏங் கால் படாத தோட்டம் காடு கெடையாது,இன்ன வேலைன்னு இல்லை,எல்லா வேலையும் செய்வேன்.களை எடுக்கப்போறது,பாத்தி கட்டப் போறது.தண்ணி பாய்ச்சப்போறது,மரம் வெட்டுக்கு,வெறகு வெட்ட,கெணத்து வேலைக்குன்னு எல்லாம் செய்யிறதுதான்,

“இப்பிடித்தான்ஒரு தடவை நைட் கரண்டு இருந்த நேரம் பெரியவீட்டுக்காரரு தோட்டத்துக்கு தண்ணி வெலக போக வேண்டியிருந்துச்சி.போயி வெலகீட்டு இருக்கேன்,நடு ராத்திரி இருக்கும்.தீடீர்ன்னு நான் தண்ணி வெலகீட்டு இருந்த யெடத்துக்கு கொஞ்சம் தூரம் தள்ளியிருந்து மல்லிகைப்பூ வாசனை வந்திச்சி, என்னடா இது இந்த கனிக்கு வந்த சோதனைன்னு மனச கல்லாக்கிக்கிட்டு தண்ணி வெலகீட்டு இருந்தா மல்லிகைப்பூ வாசனை கூடுதே தவுர கொறயல, சிலுசிலுன்னு நல்ல காத்து வேற,அப்பப்ப கொஞ்சம் மோகினி,பிசாசுன்னு கதை வேற கேட்டு வச்சிருக்கேனா,,,,அதுல சொல்ற மாதிரி மோகினி,கீகினி ஏதாவது வந்து நம்மமேல குடிகொண்டுருமோன்னு நெனைப்பும்,பயமும் வந்துருச்சி,

“அந்த நெனைப்பு வந்த மறு நிமிசம் கைகாலெல்லாம் ஒதறல் எடுக்க ஆரம் பிச்சிருச்சி,தண்ணி வெலகுறதுல இருந்த கவனம் போயி மனசு பூராம் மோ கினி வந்து உக்காந்துருச்சி, உக்காந்தது சும்மா இல்லாம மனுச மனச பாடா படுத்தி நடுக்கமெக்க வைச்சிருச்சி,என்ன செய்யிறது ஏது செய்யிறதுன்னு எனக்கு புரியல,

“இப்பிடித்தான் பக்கத்து வீட்டு அண்ணன் ஒரு தடவை ராத்திரி தோட்டத்துல தண்ணிபாய்ச்சிக்கிட்டுஇருந்துருக்காரு,அப்பஇப்பிடித்தான்நடுராத்திரி தாண்டி மல்லிகைப்பூவாசனைவந்துருக்கு.என்னசெய்யிறதுன்னு தெரியல அவருக்கு,  விடு பாத்துக்கிருவம் என்ன ஆகீறப்போகுது இப்பைன்னு துணிஞ்சி நின்னு தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்தவரு தீடீர்ன்னு மயங்கி விழுந்துட்டாராம்,நல்ல வேளைஅவருஅப்பிடி மயங்கி விழுந்த வேளை பளபளன்னு விடியிற வேளை யா இருந்துருக்கு.அந்த வழியா வந்த பக்கத்து தோட்டத்துக்காரரு பாத்து தூக்கிட்டு போயி வீடு சேத்துக்காரு,அன்னைக்கி காய்ச்சல்ல படுத்தவருதா ஒரு வாரத்துக்கு எந்திரிக்கல,அப்புறம் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைன்னு ஏகப்பட்ட செலவுபண்ணிதான்அவருஒடம்பசரிபண்ணமுடிஞ்சிச்சி,அதுபோல ஆயிருமோன்னு நெனைச்சேன்,எனக்கு அந்த நெனைப்பு வந்தமறு நிமிஷம் காய்ச்சல் வர்ற மாதிரி ஆகி கைகாலெல்லாம் ஒதறல் எடுக்க ஆரம்பிச்சிரு ச்சி.

ஒடனே ஒடிகிட்டு இருந்த தண்ணி ஓடிக்கிட்டு இருக்க அப்பிடியே விட்டுட்டு பயமும் ஒதறலுமா வீட்டுக்கு வந்துட்டேன்.மோட்டாரு அங்க ஒடிக்கிட்டு இருக்கு.நான் அப்பிடியே வந்துட்டேன் ,கேள்விப்பட்ட தோட்டத்துக்காரரு ஓடி வந்து ஏங்கிட்ட மோட்டார் ரூமு சாவிய வாங்கீட்டு போயி மோட்டார ஆப் பண்ணீட்டு வந்து என்னைய வாங்னு வாங்குன்னு வாங்கீட்டாரு.

“சரின்னுஅன்னையில இருந்து அவரு வீட்டு தோட்டத்துக்கு தண்ணி வெலகப் போறதில்ல.ஆனா அவரு விடலை. ஒரு நாள் ஏங்கிட்ட வந்து நீயி இதுக்கெல் லாம்அனாவசியமாபயப்படாத,இன்னைக்கி நைட்டு நானும் ஓங்கூட தண்ணி பாய்ச்சவர்றேன்னுஅவரும்ஏங்கூட அன்னிக்கி நைட்டு வந்தாரு, நான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்க அவரு மோட்டாரு ரூமு மாடியில ஏறி படுத்துக்கிட் டாரு.

அன்னைக்கி தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கும் போது வந்த மாதிரியே நடு ராத்திரி தாண்டுனதும் மல்லிகைப்பூ வாசனை வர ஆரம்பிச்சிருச்சி.ஒடனே பதறிப்போயி அவர எழுப்பி விஷயத்தச் சொன்னதும் அவரு பதறாம மேல இருந்து யெறங்கி வந்தவரு,லேசா சிலு சிலுன்னு காத்து அடிக்குதா இப்ப, வா என்னோடன்னு கெணத்து மேட்ட நோக்கி கூட்டீட்டு போனாரு,கூட்டிக்கிட்டு போனவரு கெணத்து மேட்டுக்கிட்ட போன ஒட னே டார்ச் அடிச்சி காண்பிச் சாரு,அங்க பாத்தா கெணத்து மேட்டுல நாலைஞ்சி மஞ்சனத்திசெடிகபூப்பூத்து மலர்ந்து கெடக்கு,பக்கத்துல போயி மோந்து பாருன்னு சொன்னாரு,அவரு சொன்ன மாதிரியே மல்லிகைப்பூ வாசனை அந்த மஞ்சனத்திச் செடியில இரு ந்து தூக்கலா வந்திச்சி,மல்லிகைப்பூ வாசனை மஞ்சனத்தியில குடி கொண் டிருக்க நீ வாட்டுக்கு மோகினி அது இதுன்னு எதுக்குப் போயி பயப்பட்டுக் கிட்டு இருக்கன்னு,என்னைய தெளிவு படுத்துனாரு ,

அன்னையில இருந்து எந்த பயமும்இல்லாம எந்த ராவானாலும் எந்த பகலா னாலும்மனுசபயம்தவிர்த்து எல்லாயெடத்துக்கும் போயிட்டு வந்தேன் வேலை க்கு.அப்பிடி போயிக்கிட்டும் வந்துக்கிட்டும்இருந்தஒரு நாளையில தான் கம்ப ங்கருது அறுக்கணுன்னு என்னைய வேலைக்குக் கூப்புட்டுருந்தாரு பெரிய வீட்டுக்காரரு,

நான் வேலைக்குப்போன அதே தோட்டத்துக்கு என்னைய விரும்புன பொண் ணும் கறுதறுக்க வந்துருக்கு,அது எனக்கு தெரியல, காண்ட்ராக்ட் வேலை, மொத்தம்பத்து பேருக்கு மேல வேலைக்கு வந்துருந்துதாங்க, அதுல அவளும் ஒருத்தியா பொதிஞ்சி கெடந்தது தெரியல எனக்கு,

“ஆளு வேற கொஞ்சம் குட்டையா வெளைஞ்சி நிக்குற கம்பந்தட்டை ஒயரத் துக்கு இருப்பாளா அதுனால கதிரறுத்துக்கிட்டு இருக்கும் போது வெளிய தெரியல,

கதிரறுக்குற அவுங்ககிட்ட இருந்து அறுத்த கறுத சாக்குல வாங்கி வாங்கி போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருந்தேன்,அப்ப எல்லார் கிட்டயும் குனிஞ்சி நிமிந்து கருது வாங்குனது போலதான் அவகிட்டயும் வாங்கிட்டு வந்துகிட்டு இருந்தேன்,எல்லார்கிட்டயும் கருது வாங்கும் போது கருது குடுக்குற அவுங்க கையும் வாங்குற ஏங் கையும் ஒரசத்தான் செய்யும்.ஆனா அவகிட்ட கருது வாங்கும் போது மட்டும் அந்த ஒரசல்ல ஒரு வித்தியாசம் தெரிஞ்சிச்சி,

நான் அந்த நேரத்துல அத வெளிப்படுத்தாதவனா இருந்துட்டு வேலையெல் லாம் முடிஞ்சப்பெறகு எல்லாரும் வீட்டுக்கு கெளம்பிப்போற நேரமா பாத்து கருதறுக்க வந்திருந்த எங்க பக்கத்து வீட்டு அக்காகிட்டப்போயி விஷயத்தச் சொன்னப்பஅடகிறுக்காஇதப்போயா ஏங்கிட்ட வந்து கேப்ப.அவ கை ஓங் மேல ஒரசுனது தற்செயல் கெடையாது,அவ ஓங் மேல உசுறயே வச்சிக்கிருக்காடா கிறுக்குப்பையலே,இது தெரியாம,நீயி ஏன்கிட்ட வந்து அவ கைய தொட் டுட்டா, காலத் தொட்டுட்டா,,,,,, டட்டுட்டா,, ,டாட்டுட்டான்னு கதை சொல்லிக் கிட்டு திரியிற,,,,ஓங் வயசு புள்ளைங்க ஊருக்குள்ள திரியிற திரியிறதப் பாரு, அதது காரச்சேவுக்கு கையும் காலும் மொளைச்சது மாதிரி இருந்துக்கிட்டு என்னென்ன வேலை பண்ணிக்கிட்டு திரியுது, ஒனக்கென்னதங்கத்துக்குன்னு அந்தஅக்கா சொன்ன நாளையிலயிருந்து கொஞ்ச நாள்லயே ஒன்னைய இப்பி டியே இந்த ஊர்லயே விட்டா சுத்தமா நம்ம தொழில மறந்துட்டு கூலிக்கார னா மாறிறுவேன்னு இந்த ஊர்ல தூக்கிக்கொண்டாந்து போட்டு தொழிலப் புடிச்சி என்னோட யெணைச்சி கட்டிவிட்டு என்னைய ஒரு தொழில்க்காரனா ஆக்கி வச்சி எனக்கு கல்யாணமும் பண்ணி வச்சிட்டாங்க,

எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது என்னைய விரும்புன அந்தப் பொண்ணப் பத்தி ஏங் வீட்ல சொல்ல எனக்கு தைரியம் இல்லை.

எனக்கு கல்யாணமும் ஆகி ஏங் சொந்த ஊருக்குப் போன பெறகு எதாவது வேலையா இந்தஊருக்கு வரும் போது அவ வாக்கப்பட்ட வீட்டுக்கு போக நேர்ந்து போகுதுதான்,

அப்பிடியா போகையில மனசு படுற சங்கடம் என்னைய ரெண்டு நாளைக்கு தூங்க விடுறதில்லை.

அப்பிடியா இருக்குற போது போன ஒரு தடவைதான் அவ வீட்டுக்கு போக வேண்டிய நிர்பந்தம் ஆகிப்போச்சி,ஏன்னா பத்து வீட்டுக்காரகள்ல அவுங்களும் ஒரு வீடு/

“அப்பிடி போயிட்டு வரும் போது எல்லார் வீட்டுக்கும் போயிட்டு அவ வீட்டு க்கும் போயிட்டு வந்துட்டேன்,சாப்புடாம செய்யாமா ஒரு டீக்கூட குடிக்கல, அவ புருசன் புள்ள குட்டிகள பாத்துட்டு ஒக்காந்து பேசீட்டு நா கொண்டு போனத குடுத்துட்டு வந்துட்டேன்.

“நான்வந்ததுக்கு அப்புறமா அவ ரொம்ப மனசு ஒடைஞ்சி வருத்தப்பட்டுருக்கா, என்னடா இவன் நம்மள கல்யாணந்தான் கட்டிக்கிற மாட்டேன்னுட்டான், நம்ம வீட்டுக்கு வந்தா சாப்புடக்கூட மாட்டேங்குறானேன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு ரெண்டு நா சரியா சாப்புடாம தூங்காம கெடந்துருக்கா,

”அவன் புருசங்காரன் போன் பண்ணி விஷயத்த சொன்னான் ,இன்ன மாதிரி இன்ன மாதிரின்னு,அப்பறமா ஒரு நா போயி நானே பணம் குடுத்து வம்படி யா போயி கறி எடுத்துட்டு வரச்சொல்லி சாப்புட்டுட்டுதான் வந்தேன்.

கல்யாணம்ஆயிரெண்டுபுள்ளைங்கஆனப்பெறகும் கூட நம்மள உசுறா நெனை க்க ஒரு ஜீவன் இருக்குன்னு சந்தோசமா இருந்தாலும் கூட ஒரு பக்கம் வருத் தமாவும் இருக்கு.

அதஅவகிட்டசொல்லீட்டு பொழப்பப்பாரு ஒழுக்கமா ,கண்டபடி மனச அலைய விடாமன்னு சொல்லீட்டு ஊரு வந்து சேந்தேன்.

எனச் சொல்கிற கனியண்ணன் இது போலான நெனைப்புகளெல்லாம் சேந்து தான் என்னைய தூங்க விடாம பண்ணீருது என்கிறார்,

இவனுக்கு தூக்கம் வந்த வேளை வெளியில் மழை பெய்ய ஆரம்பித்திருந்த து.

கதவை திறந்து கொண்டு வெளியில் போய் பார்த்த வேளையாய் பூமிக்கும் வானத்திற்குமாய் நட்டு வைத்த வெள்ளிக் கம்பிகளை போல் பெய்த மழை பூமியில் காலூன்ற எப்பொழுது பிள்ளையார் சுழியிட்டது என்கிற ஆச்சரியம் இவனில் மேலிட்டது.

Dec 4, 2017

ட்ரிம்மர்,,,,,

கடைசி முடியை தேடி வெட்டிக்கொண்டிருக்கும் போதுதான் சலூன் கடைக்கா ரரிடம் கேட்கிறான், டீக்கடை இந்நேரம் திறந்திருக்குமா என,

அதற்கு அவர் கொஞ்சம் இருங்க சார் சொல்றேன் இந்தா ஒங்க தலையில மத்த முடிகளுக்கு ஊடால அங்கங்க நீட்டிக்கிட்டு இருக்கு பாருங்க, வெள்ளை முடிக,அதுகளதேடித்தேடி கட் பண்ணிக்கிட்டு இருக்கேன்,இந்நேரம் ஒங்க பேச் சுக்கு காது குடுத்தேன்னு வையிங்க,அப்புறம் முடி தப்பீரும். தப்புனது மட்டும் வெள்ளையாவே நீட்டிக்கிட்டு இருக்கும்.

அது ஆயிரம் கறுப்பு முடிகளுக்கு மத்தியில இருக்குற ஒரு வெள்ளை முடி போலவும்,ஆயிரம் வெள்ளைமுடிகளுக்குமத்தியில் இருக்குற ஒரு வெள்ளை முடி போலவும் நீட்டிக்கிட்டு வித்தியாசப்பட்டுத்தெரியும் நெறஞ்சி நிக்குற பச் சைகளுக்கு மத்தியில வாடிப்போயி பயிர் போல காட்சிப்பட்டுத்தெரியும்,அது நல்லாவா இருக்கும்,

மண்ணும் மணமும் அது குடுக்குற பலனும் எவ்வளவு தூரம் நமக்கு நல்லதாகி நிக்குதோ அவ்வளவு தூரம் அது குடுக்குற பலனும் நமக்கு கெடைக்குது ங்குறது வாஸ்தவமான சொல்லு ஆமாம்,

முந்தா நாளு பருத்தி நேத்து நெல்லு இன்னைக்கி கடலைன்னு வருசத்துல வர்ற நாட்கல சம்பங்கீடா பிரிச்சி அந்தந்த பருவத்துக்கு ஏத்தாப்புல விவசா யம் பண்ணி ஊருக்கே சோறு போட்டவுங்க பாடு இன்னைக்கி வீதியில கெட க்கு,

நெலத்த உழுது பண்படுத்தி ஒரம் போட்டு பாத்தி கட்டி விதைச்சி அதுக்கு தண்ணி பாய்ச்சி களை எடுத்து பூச்சி மருந்து அடிச்சி வேலையாட்களோட வேலையாட்களா தோட்டம் காடுகள்ல நின்னு வேகாத வெயில்லயும் மழை யிலயும்வேலைபாத்து தான் ரத்தத்த வேர்வையா சிந்தி ஒழைச்சி அறுவடை செஞ்சி எடுத்துட்டு வர்ற பொருளுக்கு நல்ல வெலை கெடைக்குறது இல்லை. அப்புறம் எங்கிட்டு இருந்து சார்,விவசாயம் பண்ணுறது ,சொல்லுங்க,

இப்ப அவ்வளவு ஏக்கர் கணக்குல வச்சி விவசாயம் பண்ணுறவுங்களும் சரி. ஒரு நாளைக்கி வெளியேறி வேலைக்குப் போனாமுன்னூறு ரூபாயில இருந்து நானூரு ரூபாய் வரைக்கும் கெடைக்கிறது உறுதியாகிப்போகுது,அந்த உறுதி நெலத்துல பாடு படுற அவுங்களுக்கு கெடைக்கும்ங்குற உத்தரவாதம் கெடைக் கட்டும்,

அவுங்க எதுக்கு விவசாயத்த கைவிடப்போறாங்க சொல்லுங்க, வேற வழியி ல்லாமயும் மனச கல்லாக்கிட்டும்தான கூலி வேலைக்கு ப்போறாங்க,இதுல மழைக்கும் அவுங்களுக்கு நடக்குற போட்டி வேற,இயற்கை சீற்றங்களோட தாண்டவம் வேற,அவுங்க எதுக்குன்னுதான் ஆளாகியும் பலி யாகியும் நிப்பா ங்க சொல்லுங்க அவுங்க பிரியப்பட்டு போறதில்ல,மேலும் அப் பிடியெல் லாம் ஆகுறப்ப பொழப்ப நடத்தனுமில்ல,இவுகளயே நம்பி பூமிக்கு வந்துட்ட ஜீவன்கள கவனிக்கணுமில்ல,தவுர அன் றாடம்நெலத்துல பாடுபட்ட ஜீவன்க ளாலசும்மாஇருக்க முடியாதுதான அப்பிடி சும்மாஇருக்கமனசு வராமயும் இரு ப்புக் கொள்ளாமயும் அவுங்க செஞ்சி வச்ச வேலைதான் மண்ன பச்சையாகி வச்சிருக்குறது.

ஆனா அப்பிடியாபட்ட வேலை செஞ்சி மண்ண பொண்ணாக்குரவுங்களுக்கு இங்க எங்க சார் மதிப்பு இருக்கு,அவுங்கள மதிக்க கத்துக்குடுக்க வேண்டியவு ங்களே மௌனமாகி நிக்கும் போது எங்கிட்டு வந்து அவுங்கள மதிக்க ஆளு வந்து தனியா வரிசை கட்டி நிக்கப்போகுது, ஏதோ ஒங்களப்போல என்னை யப் போல ரெண்டென்னு ஆளு அவுங்கள மனசார மதிக்கிறோம்,இல்லைன்னு சொல்லல,அது எப்பிடி போதும்,பெரும் பாலுமா இருக்குற மதிக்காத தன்மை சிறு பான்மையா இருக்குற மதிக்கிற தன்மைய ஏறி மிதிச்சிட்டு போயிருதில் ல, என கொஞ்சமாய் பேசுவார்,சமயங்களில் நிறைய பேசுவார்,

அவரது பேச்சு போலவே தலையில் இருந்த முடியும் ஆங்காங்கே நீட்டிக் கொண்டு தெரிந்தது,அதைத்தான் தேடி வெட்டிக்கொண்டு இருக்கிறேன் என்ற வர் பேச்சில் கொஞ்சம் ஒட்டுதலை கலந்து விட்டார்.

அப்புறம் அது மட்டும் விட்டுத் தெரியும். நீங்க சிலரப் போல தலைக்கு டை அடிக்கிற ஆளும் கெடையாது.கேட்டா அது பாட்டுக்கு இயல்பா இருக்க ட்டு முன்னு சொல்வீங்க, ஆனா இங்க கடைக்கி வர்றவுன்கள்ல பாதிப்பேரு என்ன டைஅடிச்சுக்கத்தான் வர்றாங்க,என்னன்னு கேட்டப்பமுன்னா ஆள் பாதி அழகு பாதின்னு சொல்றாங்க, சரி இருந்துட்டு போகட்டும் தலையில இருக்குற வரைக்கும் தலைக்கு அதுதான அழகு குடுக்குது,அப்பிடி அழகு குடுக்குற முடி க்கு நாம நம்மாலான அளவு செய்வோம்ன்னு சொல்றாங்க,அவுங்க சொல் றதும் ஒரு வகையில ஞாயமாத்தான் தெரியுது,

முடி தலையில இருக்குற வரைக்கும்தான் அதுக்கு மதிப்பு,கீழ விழுந்துருச் சின்னா அது மண்ணுக்கு போன ஒண்ணுதான, அது தலையில இருக்கும் போது ஏயப்பா,அத அழகு படுத்த என்னென்ன செய்யிறோம்.அதுக்கு தேய்க்க தேங்காய்எண்ணெயில இருந்து வாசனைப்பொருள் வரைக்கும் எத்தனை எத்த னை வாங்கி வீட்ல வைக்கிறோம்.தலை முடிய எப்பிடி எப்பிடிஅயெல்லாம் ஸ்டைலா வாரிக்கிறுறோம்,வழிச்சி விட்டுக்கிறோம், அழகு படுத்திக்கிறோம், எத்தனை எத்தனை விதமா கலரிங் பண்ணிக்கிறோம், முடிவெட்டிக்கிற எத்த னை எத்தனை சலூன்களா தேடித்தேடி அலையுறோம், அது காணாதுன்னு பியூட்டி பார்லருக்கும் வேற போயிக்கிறோம்.இத்தனையும் செஞ்சி முடிச்ச துக்கப்புறம் முடிவளந்துருச்சின்னு என்னைய மாதிரி சலூன் காரர்கிட்ட வந்து தான் நிக்குறீங்க,

அப்பிடி வந்து நிக்கலைன்னாலும் முடி பொதறா வளந்து நிக்கும் அநியாயத் துக்கு, பின்ன அதுல பாம்பு பல்லி அடைஞ்சிருமுன்னு ஏங்கிட்ட வந்து நிக்கும் போது நான் வேற வழியில்லாம வெட்டிவிடத்தான் வேண்டியிருக்கு முடிய,

எனக்கு அதுதான் வேலைன்னாலும் கூட நீங்க வர்ற அவசரம்,நீங்க சுமந்து வர்ற மனோ நிலை,வீட்ல ,ஆபீசுல நடக்குறத மனசுல அடக்கிட்டு வர்றது, , , ,,எல்லாத்தையும் நாங்க ஒங்கள சேர்ல ஒக்கார வச்சிட்டு எதிர் கொள்ள வே ண்டியதா இருக்கு பாத்துக்கங்க, என்பார்.ஆனா அப்பிடி பல மனோநிலையில வர்ற ஒங்களயெல்லாம் ஏத்துக்கிட்டு சிரிச்ச மொகத்தோடவோ இல்லை உம்மனா மூஞ்சியோடயோ சர்வீஸ் பண்ணுற எங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க இங்க கடையில நிக்கிற வேலை யிலயும்ஒங்களுக்குமுடி வெட்டிக்கி ட்டு இருக்கும் போதும்தான் செய்ய வேண்டியதிருக்கு,

அன்னைக்கி ஒரு நா அப்பிடித்தான் போன் வந்துருச்சி.போன் வந்த நேரம் ஒங்களப் போல ஒருத்தருக்கு முடி வெட்டிக்கிட்டு இருந்தேன்,முடி வெட்றத நிறுத்தீட்டு கொஞ்ச நேரம் போன் பேசுனேன்,அதுக்கு முடி வெட்ட வந்தவரு ரொம்பகோவிச்சிக்கிட்டாரு.இந்த மாதிரி பாதியிலயே விட்டுட்டு போன் பேசிக் கிட்டு இருந்தா என்ன அர்த்தம்,இதுதான் நா ஒங்ககிட்ட முடிவெட்டிக்க வர்ற கடைசி தடவை,இனிம வரமாட்டேன் எனச் சொன்னவராய் போய் விட்டார்,

வாஸ்தவம்தான் அவர் சொல்வதும் இவன் முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது கூட அது போலான அனுபவம் இவனுக்கு நேர்ந்திருக்கிறது,

போன வாரத்தின் லீவு நாளன்றின் போது ஒரு நாளில் முடி வெட்டிக் கொண் டிருக்கும் போது அவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்தவர் வந்து விட்டார்.முடி வெட்டிக்கொண்டிருந்த அவரது செய்கையிலேயே அது தெரிந்தது,

கடன் கொடுத்தவர் கடைக்குள் நுழையும் முன்னாய் இவன் உட்கார்ந்திருந்த சேரின் முன் இருந்த ட்ராயரைத் திறந்து ஐம்பது நூறு என நோட்டுக்களை அள்ளி மேஜையில் போட்டார்,

அப்புறமாய்அந்தகுட்டிப்புத்தகங்களைஎடுத்துப்போய்பணத்தையும்புத்தகங்களையும் சேர்த்து கொண்டு போய் கடையின் ஒரு மூலையில் வைத்தார்.கடன் கொடுத் தவர் வந்ததும் இவர் அவருக்கு ரூபாயை கொடுத்துவிட்டுப் போயிருந்த இடத் திலிருந்து தொழிலைத் தொடர்கிறார்.

வந்தவரும் பணத்தை வரவு வைத்தவாறே என்ன இது நீங்க சொன்னீங்கன் னுதான குடுத்தேன்,இப்ப ஒழுங்க ரெண்டு பேரு கிட்டயிருந்து பணம் வரல, ஆமாம் தெரிஞ்சிக்கங்க, ஒரு நாளைக்கு நாலு தடவை ஒயின் ஷாப்புக்கு நடக்கத்தெரியுது.வாங்குன காச குடுக்கத் தெரியலையா என சப்தம் போட்டார், சலூன் கடைக்காரரிடம்,

அவர் என்ன செய்வார் பாவம் ,சரிண்ணே,இனிம ஒழுங்கா கட்ட சொல்லீரு றேண்ணே என்றார், கடன்காரர் போனதும் சார் இவுங்க எனக்கு வட்டிக்கு கடன் குடுத்தவுங்க,இவுங்க கிட்ட எனக்கு மட்டும் இல்லாம நன் ஏத்துக்கிட்டு நாலைஞ்சி பேருக்கு கடன் வாங் கிக் குடுத்துருக்கேன்.என்ன செய்யிறது சார், சோத்துக்கு இல்ல,கொழம்புக்கு இல்லைன்னு வந்து நிக்குறாங்க, வாங்கிக் குடுக்கத்தான் வேண்டியதிருக்கு,

சரின்னு நான் ஏத்துக்கிட்டு வாங்கிக்குடுத்தது இப்ப அவுங்க நேரத்துக்கு குடுக் காததுனால என்னைய புடிச்சிக்கிட்டு வையிறாங்க,தினசரி வசூலு,என்ன செய் ய சொல்லுங்க,அவுங்களுக்கும் என்னைய மாதிரி ஆள்க வேண்டியதிருக்கு, எங்களுக்கும் அவுங்களப் போல ஆள்க வேண்டியதிருக்கு,அவுங்க ரெண்டு சொல்ல வேண்டியதுதா,நாங்க ரெண்டு கேட்டுக்க வேண்டியதுதா,ஓடுது வண்டி. என கடைக்கு போகிற ஒவ்வொரு தடவையுமாய் சொல்லுவார்.

இவன் அதற்கு பதில் சொல்கிறவனாய் மெல்லிய சிரிப்பு காட்டி சமாளிப்பான். அதற்கு அர்த்தத்தை அவர் புரிந்து கொள்வார்,

இந்நேரம் டீக்கடை தெறந்திருக்குமான்னு தெரியல சார்,மணி பண்ணெண்டு ஆச்சு,இன்னைக்கி ஞாயித்துக்கெழமை வேற,,கடை தெறந்துருந்தா ஒங்களு க்கு யோகம்தான் சார் போய்ப்பாருங்க என வழியனுப்பி வைத்தார்.

இவ்வளவுதான் மெலிந்து இருப்பு காட்ட முடியுமோ அவரது உடல் என்கிற அளவிற்காய் மெலிந்து போய் காணப்பட்ட அவரின் தலை முடி முழுவதும் வெளித்து இடையிடையே போனால் போகிறது என்பது போல் கறுப்பு முடிக ளை காட்சிப்படுத்திக்கொண்டுவாறாய் அலை பாய்ந்து கொண்டு இருந்தது, தலை நிறைய இல்லாவிட்டாலும் கொஞ்சமாய் ஒட்ட வெட்டப்பட்டு காணப் பட்டமுடிகள் தலை மேல் ஒன்று போல படர்ந்து துணி டிசைன் துணி போர்த் தியது போல் காணப்பட்டது,

ஒரு பக்கம் பார்க்கையில் தலை மேல் வரைந்து வைத்த நவீன ஓவியம் போலவுமாய் இருந்தது. ஒருபக்கம் அதை பார்க்கும் போது அழகாவும் கொஞ் சம் பொறாமையாகவும் இருக்கிறது,

எப்பொழுது பார்த்தாலும் இப்படி ஒன்று போல் தலை முடியை வைத்திருக்க எப்படிமுடிகிறது இவரால் என ஆச்சரியமும் வரத்தான் செய் கிறது கூடவே,,,/ இவனுக்கானால் தலையில் கொஞ்சம் முடி கூடிப்போனால் அசிங்கமாக இருக்கிறது பார்க்க,கொஞ்சம் குறைவாக இருந்தால் எப்படியோ இருக்கிறது பார்க்க,இரண்டு நாட்களாய் விட்டு விட்டு தூறிக்கொண் டிருந்ததாலும் மேகம் மூடிக்கொண்டிருந்ததாலும் முடி வெட்டிக்கொள்ள முடியவில்லை,

தவிர்த்து போன் பண்ணி கேட்டு விட்டுத்தான் வந்தான்.கடையின் நம்பரை அவரது கடை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்,

தேவைப்படுகிற சமயங்களில் கடைக்கு வந்து கடை மூடியிருக்கிறது எனத் திரும்பிப் போகாமல் போன் பண்ணி கேட்டு விட்டு கடைக்குப் போகலாம் என்கிற முடிவில் எழுதி வைத்திருக்கிறார்,

போன தடவை கடைக்கு சென்றிருந்த போது நான் கைந்துதடவைகள்கடைக்கு வந்து திரும்பிப்போனதைச்சொல்லி கொஞ்சமாய் குறைபட்டுக்கொண்ட போது தனதுசெல்நம்பரைகடை சுவற்றில்எழுதி வைத்திருப்பதை காட்டினார்,

இத்தனை நாட்களாய் கடைக்கு வருகிறவன் எப்படி இந்த விஷயத்தை கவனி க்காமல் இருந்தான் என்பது ஆச்சரியமாகவே,,,,,,/

பொதுவாகவே இவன் அலுவலகம் விட்டு வருகிற மாலை நேரங்களில் முடி வெட்டிக்கொள்வதுண்டு.அதனால் போன் நம்பர் எல்லாம் குறித்தும் வைத்துக் கொள்வதில்லை,அதுஅவசியமாயும்இருந்திருக்கவில்லை. இவனுக்கு,

ஆனால் இன்று அப்படியில்லை,நேற்று அலுவலகம் விட்டுவரும்பொழுது கடை பூட்டியிருந்தது.

அதுதான் இன்று போன் பண்ணிகேட்டுவிட்டுப் போனான்,இவன்போகும் போது ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டிருந்தார்,

என்ன சார் போன் பண்ணியிருந்தேனே, கெடைச்சதா என்றவாறு கடைக்குள்ள வாங்க சார் என்றார்,கடைக்காரர்.

இவன் சென்ற சிறிது நேரத்திலெல்லாம் இவனுக்கு முன் முடி வெட்டிக் கொண்டிருந்தவர் எழுந்து விடவும் இவன் உள்ளே சென்று சேரில் அமரவும் சரியாக  இருந்தது.

Nov 30, 2017

வரிச்சி,,,,,,நீளப்பறந்த ரோட்டில் அந்த கடையில் டீக்குடிக்க இவனுக்கு மிகவும் பிடித் திருந்ததுதான்.

அதற்காக மற்ற டீக்கடைகளில் டீக்குடிக்க இவனுக்கு பிடிக்காமல் இல்லை,

எப்போதாவது கொஞ்சமாய் பிடிக்காமல் போவதுதான்.சமயங்களில்மிகவும் பிடித்துப் போகும் அதற்கு ,காரணம் இல்லாமல் இல்லை.

பெரும்பாலுமாய் கூரைக் கடையில் சாப்பிடுவான்.

அது கூரைக்கடை இல்லை,அதற்கு பெயர் அப்படியே நிலைத்து விட்டது, கடையின் முன் இருக்கிற வெளியில் கூரை போட்டு தாழ்வாரம் இறக்கி அதன் உள்தான் டீக்கடை இருந்திருக்கிறது,

கூரை தாழ்வாரத்தில் டீயும் தாழ்வாரத்திற்குப்பின் ஹாலாக விரிந்த கட்டிட முமாக இருந்திருக்கிறது.இப்பொழுதும் கட்டிடத்தின் சுவரில் எங்காவது ஒரு மூலையில்,,,,,,,,,,,மெஸ் என எழுதியிருப்பதை பார்க்கலாம்.

டீக் குடித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் இவன் மனம் உறுத்தி கேட்க நினைத்திருந்த கேள்வியை கேட்டே விட்டான், டீ மாஸ்டரிடம்/

அவரும் ”ஆமாம் சார் இதுக்கு முன்னாடி சாப்பாடு மெஸ் இருந்துச்சி, காலை யில நைட்டுக்கு டிபன் கெடையாது,முழுசா சாப்பாடுதான்,

”காலையில பதினோரு மணிக்குக்கெல்லாம் சாப்பாடு ரெடியாயிரும், அப்பயி லயிருந்து சாய்ங்காலம் நாலு மணி வரைக்கும் ஓடும்,

”சும்மா சொல்லக்கூடாது,நல்லா ஓடும்,சமயத்துல ஒரு சிப்பத்துல பாதிவரை க்கும் கூட காலியாகிரும் அரிசி.டிபன் சாப்புட்டு அலுத்துப்போனவுங்க, ஒங்க ளப் போல மூணு நேரமும் சோறு சோறுன்னு சாப்புடுறவுங்க இன்னும் இன் னுமா சோறு மேல பிரியம் உள்ளவுங்களுக்கு எல்லாத்துக்கும் இந்தக் கடை பிரியம் ஆகிப் போச்சி.

மூணு நேரமும் சோறா சாப்புடுறீங்கன்னு ஒங்கள தப்பா சொல்லல சார்,நான் அப்பிடித்தான் மூணு வேளை இல்லை,ஆறு வேளையும் சாப்பாடு வச்சாக்கூட சாப்புடுவேன்,

”சோத்தாலா அடிச்சவுங்கன்னு சொல்வாங்கல்ல,அது மாதிரிதான் சார் நானெ ல்லாம்,நமக்கு அப்பிடி சாப்டாத்தான் சாப்ட்ட திருப்தியா இருக்கு, ஆனா இப்ப ஆசைப்பட்டா கூட அப்பிடி சாப்புட முடியல,வீட்ல இட்லி தோசைதான் போடு றாங்க,அத விட்டு வெளியில கடையில சாப்புடலாம்ன்னு பாத்தாலும் அந் நேரத்துக்கு கடையில சோறு கிடைக்கிறதுங்குறது அபூர்வம்தான், ஊரெல் லாம் தேடிப்பாத்தலும் கெடைக்காது.தலை கீழா நின்னு தவம் பண்ணுனாக் கூட ம்ஹூம் கெடைக்காது,

”அப்பறம் பூக்காதத காய்க்கச் சொன்ன கதையா ஆகிப் போகும்.இது எதுக்கு வீண்வம்புன்னு வேணாம் இதுக்காக போயி சாப்பாட்டுக் கடைக்காரங்கள புண் படுத்தக் கூடாதுன்னும் நொந்துக்கக்கூடாதுன்னும் விட்டுட்டேன்.

நான் பரவாயில்ல,ராம்நாட் பக்கமிருந்து வந்து இங்க கௌவர்மெண்ட் வேலை பாக்கவந்திருக்குற ஒருத்தர்ன்னா காலையில ஆபீசுக்குப் போயிட்டு காலை யில பதினோரு மணிக்கு சோத்த வடிச்சி யெறக்குன ஒடனே வந்துருவாரு,

அவரு சொல்லுவாரு.பதினோரு மணிக்கு வடிச்சி யெறக்குற சோத்த காலை யில ஒன்பது மணிக்கெல்லாம் ஆக்கினீங்கன்னா என்னையப்போல ஆள்களு க்கு ஒதவியா இருக்கும்ன்னு/

அவரு சொன்னதுக்கு கடைக்காரரு சொன்னாரு,”இருக்கும்தான்,இதுக்கே எங் களுக்கு வேலை செய்ய நாக்கு தள்ளிப் போகுது. நாளுக்கு நாளு சாப்புட வர்ற ஆள்க எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது, எங்களுக்கு ஆள்க எண்ணிக்கை கூடக் கூட வருமானந்தான, சம்பாத்தியந்தானன்னு நெனைச்சாக்கூடா எங்க ஒடம்பு நலனையும் பாக்கனுமில்ல,

“சம்பாத்தியம்சம்பாத்தியமுன்னுஓடிக்கிட்டுதிரிஞ்சாஅப்புறம்நாங்கஆஸ்பத்தி ரியில போயி கெடக்க வேண்டியதுதா,எங்கள வந்து பாக்க நீங்களெல்லாம் வரிசை கட்டிவரணும்பாத்துக்கங்க,ஒங்களப்போலகாலையில சீக்கிரமாவும், சாய்காலம் வரைக்குமா கடைய தெறந்து வச்சிருக்கச்செல்றவுங்க நெறயப் பேரு  இருக்காங்கதான்,

“நீங்களாவதுகாலையில சீக்கிரம் சூடான சாப்பாடு குடுங்கன்னு கேக்குறீங்க, இன்னும் சில பேர்ன்னா பழைய சோறு கெடைச்சாக்கூட போதும் பரவாயில் லன்னு சொல்றாங்க,

“அவுங்க சொல்ற படி செய்வோம்ன்னு நைட்டு கொஞ்சம் சாப்பாடு ஆக்கி வைச்சி காலையில மோர் ஊத்தி பழைய சோறா குடுத்துறலாம்ன்னு பாத்தா அதுக்கும் வழியில்லாம ஆகிப் போச்சி/

அப்பிடி சிலரு கேட்ட புதுசுல பழைய சோறு வித்திக் கிட்டிருந்தோம் ,அதுக் கும் கெராக்கி கூடிப் போச்சி.அதுல கவனம் போனா அப்புறம் பதினோரு மணிக்கு சோத்த வடிச்சி ரெடியா வச்சிக்கிற முடியாதுன்னும் யேவாரம் கெட்டுப் போயிருமுன்னும் ஒரு முடிவு எடுத்தோம்,

”காலையில பதினோரு மணிக்கு இறக்குற சோத்த பத்து மணிக்கு முன்னா டியே அடுப்புல இருந்து யெறக்குறதுன்னு முடிவு பண்ணுனோம்.அது படியே காலையில ஒன்பது மணிக்கெல்லாம் சோறு ரெடியா இருக்குற படி பாத்துக் கிட்டோம்.ஒன்பது மணின்னா டாண்ணு ஒன்பது மணிக்கு சோத்த வடிச்சி யெறக்கமாட்டோம்.எட்டுஎட்டரைமணிக்கெல்லாம்சாப்பாடுரெடியா இருக்கும். அது போலசாயங்காலம்ஏழுமணி வரைக்கும் வைச்சிருக்குறதுன்னு முடிவு பண்ணுனோம்.அது போல செய்யவும் செஞ்சோம்,”ஏழு மணின்னா அது எட்டு மணி வரைக்கும் கூட ஆயிரும்ன்னு சொல்வாரு கடைக்கார ஓனரு,

“அவரு இருந்த வரைக்கும் யேவாரம் நல்லா இருந்துச்சி, அவரு போனதுக் கப்புறம் கடையும் போச்சி.யேவாரமும் போச்சி,

பையங்களால கட்டி இழுக்க முடியல,அப்பிடியப்பிடியேமெல்லமெல்ல மெஸ் ஸ காலி பண்ணீட்டு அதோட மிஞ்சுனஅடையாளம இந்த டீக்கடைய வச்சிரு க்கோம்.

”இந்தக்கடையேவாரத்துக்குஒண்ணும்கொறவில்ல,ஒங்களப்போலபுண்ணியவாங்ககடைக்கு தொடர்ந்து வந்து ஆதரவு குடுக்குறவரைக்கும் யேவாரத்துக்கும் சம்பாத்தியத் துக்கும் கொறவில்லை,

“மெஸ்ஸீ நடந்துக்கிட்டு இருக்கும் போது மெஸ்ஸீ ஓனருக்கு நான் வலது கையப்போலஇருந்தேன்,அவருபோனதுக்குஅப்புறம்அவரு புள்ளைங்க எடுத்து நடத்துற இந்த டீக் கடையில மாஸ்டரா நின்னுக்கிட்டு பொழுத ஓட்டிக்கிட்டு இருக்கேன்,

எனக்குன்னு அவரு புள்ளைங்க தனியா சம்பளமுன்னு ஒண்ணு நிர்ணயிக்கல, ஒங்களுக்குஎவ்வளவு தெனசரி தேவையோ அத எடுத்துக்கங்கன்னு சொல்லீட் டாங்க,நானும்செஞ்சவேலைக்கு வஞ்சனையில்லாம ரூவா எடுத்துகிருவேன்,

ஏங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு,வாரத்துக்கு ஒரு தடவஒரு குவாட்டர் பாட்டுல உள்ளதள்ளலைன்னாதூக்கம்பிடிக்காதுஎனக்கு,,/

அது அந்தப் புள்ளைகளுக்கும்தெரியும்.அவுங்கஅதுக்குன்னுதனியாகாசு எடுத் துக்குற சொல்லீருவாங்க, சம்பளம் போக/

”அது மட்டும் இல்ல தண்ணி சாப்புடுற அன்னிக்கி ராத்திரிவீட்டுக்குப்போகாம இங்கயே படுத்துக்கிற சொல்லீறுவாங்க,மறுநா காலையில சீக்கிரம் எந்திரிச்சி கடைய தெறக்கணும்ன்னும் சொல்லீருவாங்க,

“மத்த நாளும் சீக்கிரம் தொறக்குற கடைதான்னாலும் கூட மத்த நாள்ன்னா வீட்டுல இருந்து விடி யால எந்திரிச்சி குளிச்சி முடிச்சி ரெடியாயி வருவேன், அன்னைக்கி மட்டும் இங்கயே படுத்து எந்திரிச்சி விடியாலையில குளிச்சி முடிச்சி கடை தெறந்துறுவேன்,

“மறு நா ஞாயித்துக்கெழமைதான மதியம் வரைக்கும்தான கடை, கடைய முடிச்சிட்டு வீட்டுக்குப் போனேன்னா ரெடியா இருக்குற கறிச்சாப்பாட்ட சாப்புட்டுட்டு படுத்துருவேன்.

நானும் ஏங்க வீட்டுக்காரி மட்டும்தான் வீட்டுல, புள்ளைங்க ரெண்டையும் கட்டுக் குடுத்துட்டோம்.எங்க ரெண்டு பேருக்கு அரைக்கிலோ கறி எடுத்தாலே அதிகம் .

எடுத்து நல்லா கொழ கொழன்னு கொழம்பு வச்சி யெறக்கி வச்சிருப்பா ,நான் போனதும் ரெண்டு பேருமா பேசிக்கிட்டே சாபுட்டுட்டு அப்பிடியே ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா மறு நா பொழுது விடிஞ்சிரும்.

அப்பிடியே பொழப்பப் பாக்க இங்கிட்டு ஓடி வர்றதுதான். எனச்சொன்னவர் கொடுத்த டீயை வாங்கிக்குடித்துக்கொண்டே அண்ணாந்து பார்த்த பொழுது கூரை இருந்த இடத்தில் வேயப்பட்டிருந்த ஊதாக்கலர் தகரம் இருந்தது.

டீக்கு காசு கொடுத்து விட்டு கடையை விட்டு வரும் பொழுது சொல்கிறார் கடைக்காரர் ,ஒங்கள ஒரு சாயல்ல பாக்கும் போது மெஸ் இருந்தப்ப காலை யில சாப்பாடு கெடைக்குமான்னு கேட்டு வந்தவரு மாதிரியே இருக்கீங்க என/

அதற்கடுத்ததாய் நீளப் பறந்திருந்த சத்திய மூர்த்தி ரோட்டில் பழைய பேப்பர் கடைக்குப் பக்கத்தில் இருந்த கடையின் டீ இவனை மிகவும் ஈர்த்திருந்தது.

காரணம் கூரைக்கடையில் கிடைக்காத மரியாதையும் மதிப்பும் இங்கு கிடைக் கும், இவனுக்கென மட்டும் இல்லை,அந்தக் கடைக்கு டீக்குடிக்க வருகிற யாருக்கும் அந்த மரியாதை சொந்தமாகித்தெரிவதுண்டு.

கடையில் சுட்டு அடுக்கப்பட்டிருக்கிற நான்கைந்து ரகமான வடைகள்,பன், பிஸ்கட், இது போக தட்டை முறுக்கு,சீடை, தேங்காய் பன் என இன்னும் இன்னுமான ரகத்திற்கு ஒன்றானவைகளை வாங்க வருகிறவர்களுக்கும் அந்த மரியாதை சொந்தமாகித் தெரிவதுண்டு.

பெரிதாக ஒன்றுமில்லை,வாங்கண்ணே,வாங்க தம்பி,வாங்க சார்,,,,,டீ சாப்புடுறீ ங்களா,,பன்னா வடையா எது வேணாலும் எடுத்து சாப்புடுங்க இந்தா டீப் போ டச் சொல்லுவோம் என்கிற சொல் பதங்களே வருகிரவர்களை சிறிது ஆற்றுப் படுத்தி அமர வைக்கும்,அப்படியான அமர்வு கடைக்கு வருகிறவர்களுக்கு ஒரு சிறிய மன இளைப்பாறலாகிப் போகும்,அந்த மன இளைப்பாறல் பெரும்பா லானவர்களுக்கு பிடித்திருந்தது,

சிலருக்கு அது அனாவாசியமாய் தெரிந்திருக்கலாம்,என்ன இது கடைக்கு வந் துட்டவுங்களப்புடிச்சிவாங்க உக்காருங்கன்னுக்கிட்டு,அதான் வந்துட்டமுல்ல,  இவுங்க வாங்கன்னு சொன்னாப்புல வந்துறப் போறமா,இல்ல வாங்கன்னு சொல்லாம இருந்தாப்புல வராம இருந்துறப் போறமா சொல்லுங்க.சும்மா போ ட்டுக்கிட்டு என்பார்கள்,

அதெல்லாம் சொல்லில் கணக்கு இல்லை அவர்களுக்கு.எதற்க்கெடுத்தாலும் நொட்டை சொல் பேசித் திரிகிறவர்களை அவர்களும் சேர்ப்பில் வைத்துக் கொள்வதில்லை, அப்படி ஆட்கள் யாரென கடைக்காரர்களுக்கும் மாஸ்டருக் கும் நன்றாக அடையாளம் தெரியும்.அதனால் அவர்களை கண்டு கொள்கிற அளவிற்கு அவர்களது பேச்சை கண்டு கொள்வதில்லை.

பிடிமானத்தின் இறுக்கமும் தளர்வும் அந்நேரத்தின் அந்நேரங்களில் மிகச் சுளு வாய் காட்சிப்பட்டுப் போகிறதுதான்.

காட்சிப்பட்ட சுளுவுக்குள் சுமந்தளுத்துகிற பாரமாய் மனம் எப்பொழுதும் எந் நேரமுமாய் ஓலமிட்டுக்கொண்டும் கைதட்டி சிரித்துக் கொண்டுமாய்/

ஏன் இப்படி என்னஏது என சுயம் காட் டி விசாரிப்பவர்கள் கொஞ்சமேயானா லும் கூட சொல்லிச்செல்வது இவனது அன்றாடமாகிப் போகிறதுதான்,

சொல்லி விடுவான் மனதிற்குள் ஒன்றும் வைத்துக்கொள்ளாமல்/.நண்பன் கூட வைவான் ”ஏண்டா இப்பிடியேவா பிளாட்டா இருக்குறது, கொஞ்சம் கூட நெளிவு சுளிவு இல்லாம,ஒனக்குன்னு ஏதும் ஒளிவு மறைவு கிடையாதா”,என அவன் கேட்கிற போது சொன்னான்,

“அப்பிடியெல்லாம் நீ நெனைக்கிறது மாதிரியெல்லாம். இல்ல,எனக்குள்ளயும் ஒளிவுமறைவு எல்லாம் உண்டு,ஆனா அத வெளியில காட்டிக்கிற மாட்டேன். சில பேரப் போல என்னைய கறாரா காண்பிச்சிக்கிறனுங்குறதுக்காக மூச்ச புடிச்சி இழுத்து நின்னுக்கிட்டு நெஞ்ச வெடைச்சமானிக்கி தம் கட்டிக்கிட்டெ கிட்டெல்லாம் திரிய மாட்டேன்,எப்பயும் போல இருக்குறதுதான்,இப்ப என்னன் னா இறுக்கமா மொறைச்சிக்கிட்டு யாரும் கூடயும் சரியா பேசாம செய்யாமா சிரிப்பு வந்தாக்கூட சிரிக்காம உம்முன்னு உர்ன்னு திரியிற ஆளா இருக்க எனக்கு பிடிக்க மாட்டேங்குது, அன்பா பாசமா இலகுவா இயல்பா இருப்போம். என்ன இப்ப கொரைஞ்சிறப் போகுது.நெனைச்சா நெனைச்சிக்கிட்டு வேணா போகட்டும்,இவன்ஒண்ணும்தெரியாதஇளிச்சவாப்பையன்னு,அதுனாலஎனக்கு  ஒண்ணும் நட்டம் ஒண்ணும் கெடையாது தெரிஞ்சிக்க,

”இது சம்பந்தமா சொல்லணும்ன்னா ஏங் பிரண்ட் ஒருத்தர் சொல்லுவாரு, அவரு கவர்மெண்ட் ஆபீசுல மேனேஜரா இருக்காரு,அவருக்கு அறுபத நெறு க்கி ஆகப் போகுது வயசு.அவரோட வயசுக்கும் அனுபவத்துக்கும் என்னென்ன பாத்துருப்பாரு,என்னென்ன கேட்டுருப்பாரு, எத்தன பேருகிட்ட பழகீருப்பாரு, எத்தனை பேரு கிட்ட நல்லவிதமா கெட்ட விதமா பேரு வாங்கிருப்பாரு, எத்த னை பேருகிட்ட மொகர அடிபட்டுருப்பாரு,எத்தனைபேரு மனசார வாயா ரா வாழ்த்தீருப்பாங்க,எத்தனை பேரு வயிறெரிஞ்சி வைஞ்சிருப்பாங்க, இன் னும் இது போலான நல்லது கெட்டதுக எத்தனைய அவரு வயசுல பாத்துருப்பாரு சொல்லு,

”அவரு சொல்லுவாரு,ஒன்னைய இளிச்சவாயன் மாதிரி இருக்குறயேன்னு சொன்னவன் பெரிசா ஒண்ணும் கெட்டிக்காரனா இருந்துற முடியாது, கெட்டிக் காரனாஇருந்தாஅவன் வாயிலயிருந்து அப்பிடிப்பட்ட வார்த்தை வராது மொத ல்ல, அப்பிடியே அவன் சொல் படி நீஇளிச்சவாயனாஅப்புராணியா இருக்குற துனால ஒனக்கு ஒண்ணும் நஷ்டம் கெடையாது, இன்னும் சொல்லப்போனா கெட்டிக்காரத்தனம் காட்டிக்கிட்டு சம்பிராயம் பேசிக்கிட்டு திரியிறாம் பாரு. அவனுக்குதான் நஷ்டம்,என்ன நம்ம நஷ்டத்த வெளியில காட்டிக்கிருவம், அவன் அப்பிடி காட்டிக்கிற மாட்டான்.அவ்வளவுதானே வித்தியாசம் ஒழிய வேற பெரிசா ஒண்ணும் இல்ல.நீ நீயா இரு,ஒன்னைய அப்பிடி சொன்னவன் அவன்அவனாஇருந்துட்டுப்போறான்.எதுக்காவும்இதுலகாம்பரமைஸ் பண்ணி க்காதன்னுவார்.

உண்மைதான் அவர் சொல்வதும் என இல்லாமல் அன்றிலிருந்து இப்படியே இருந்து விட பழகி விட்டான்.

டீயின் ருசிக்காக இல்லாவிட்டாலும் கூடபழக்கத்திற்காகபோக வேண்டிய கட்டாயமும் தேவையும் ஏற்பட்டுப் போகிறதுதான்.

பழக்கம்,,,,முக தாட்சண்யம் ,அன்பு,தோள் தழுவல்,ஈகை, விட்டுக் கொடுத்தல், மரியாதை,எல்லாம்எல்லாமும் கெட்ட வார்த்தைகளாகவும் வேஸ்ட் லக்கேஜ் களாகவும் ஆகிப் போன காலகட்டத்தில் வாழ்கிற நம்மைப் போன்றவர்கள் இந்த மண்ணில்வாழலாயக் கற்றவர்கள் ஆகிப்போனோமோ என்பான் நண் பன், ஆமாம் என முழுமையாக சொல்லிவிடத் தோணவில்லை. இல்லை என முழுவதுமாக மறுத்துவிடவும் முடியவில்லை.எதற்கு வீண் வம்பு தர்க்கம் என நினைத்து செய்வதில்லை.

அதற்கு காரணம் அந்தக் கடையின் டீ மாஸ்டரும் கடையின் ஓனரும் என்று கூடச் சொல்லலாம்.

அவர் போட்டுத் தருகிற டீயின் சுவை எனக் கூடச் சொல்லலாம்.

கடைக்குள்ளாய் நுழைந்ததும் இவன் பதிலை எதிர்பார்க்காமல் டீயை போட் டுக் கொடுத்து விடுவார் மாஸ்டர் மறு நிமிஷம்/

டீயை கையில் வாங்கிய மறு கணம் என்ன அதுக்குள்ள டீயப்போட்டுக் குடுத் தீட்டீங்க,ஒரு வடை சாப்புடலாம்ன்னு நெனைச்சேன் எனச்சொன்ன மறு நிமி ஷம் அவரே வடையை எடுத்து கையில் கொடுத்து விட்டு இந்தக் கையில் இருக்கும் டீ கிளாஸை வாங்கிக் கொள்வார்.

அவர் வாங்கிக் கொண்ட டீக்கிளாஸை ஏக்கத்துடன் பார்த்தவாறாய் வடை யை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.

உயர்த்திப் பிடித்துப் பார்த்தால் நான்கு அங்குலத்திற்கும் குறைவாய் கிளாஸி ற்குள் உறை கொண்டிருக்கிற டீயின் மிடறுகள் ஒவ்வொரு மடக்காய் நாவின் சுவைறும்புகளில் பட்டு உள்ளே பயணிக்கையில் கிடைக்கிற சுகமே அலாதிப் பட்டு இருப்பதாக,,/

டீ யில் மட்டும் இல்லை,அவர் போடுகிற வடையிலும் தனித்து காண்பிப்பார்,

சூடாகி காய்ந்து கொண்டிருக்கிற அகல வடிவமான வட்டச் சட்டியில் சுட்டெ டுக்கிற உளுந்த வடையாகட்டும்,பருப்பு வடையாகட்டும்,இன்னும் இன்னு மான பிற பிற வடைகளாகட்டும், அவர் கைபடும் போது தனி ருசி காண்பித்தும் கலர் ஏறியுமாய் தெரிந்து பட்டுப் போகிறதுதான்.

அவர் அந்தக் கடையின் டீ மாஸ்டர் மட்டுமல்ல,வடை மாஸ்டரும் அவரே/ சமயத்தில்சரக்கு மாஸ்டரும் அவரேயாகிப் போகிற வித்தையும் நடக்கும், அடுப்பில் சோற்றை வைத்து விட்டு ஓடிப்போய் கடையில் அரிசி பருப்பு அரசலவு வாங்கி வருகிற வீட்டுப் பெண்களின் அவரசம் காட்டி ஓடுவார் கடைக்கு,

காய் கறி வடை போட காய்கறி வேண்டும்,அது இருக்கும்,உளுந்தவடைபோட ஆட்டி ரெடியாக இருக்கும் மாவில் அரிந்து போட வெங்காயம் வேண்டும்,இது போக பருப்பு வடைக்கு மசால் வடைக்கு எனத்தனித்தனியாக கலந்து போட பொருள் வாங்க வேண்டும்,

இது அத்தனையும் போக பஜ்ஜிக்கு என தனியாக போட வாழைக் காய் பஜ்ஜி மாவு எல்லாம் வாங்க வேண்டும்.

இவையெல்லாவற்றின்கூட்டையும்மொத்தமாய்முக்குக்கடைக்குதான்போகவேண்டும்.

கடைக்காரரைப் பார்க்கும் போதுசரக்குமுறுக்கா கடைக்காரர் முறுக்கா என்கிற சொல்லாக்கம் தன்னைப் போலவே முளை கொண்டு நிற்கும்.மாஸ்டர் சிட் டையை நீட்டியதும் என்ன மாஸ்டர் நீங்க புதுசா சிட்டைய நீட்டிக்கிட்டு,,,,,/

நீங்க வாங்குற சரக்குதான் எனக்கு மனப்பாடம்ஆச்சே,வடைக்கு பஜ்ஜிக்கு இன்னும் போண்டாவுக்குன்னு,,,,ஜாமான்க வேணும் அவ்வளவுதான எனச் சொல்லியவறாய்எத்தனைகூட்டம்நின்றாலும்அவர்களையெல்லாம்அப்படியப் படியே நிறுத்தி வைத்து விட்டு அவரே கடைக்குள் போய் சரக்குகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொடுப்பார்.

அவர் அப்படியெல்லாம் போய் யாருக்கும் சரக்கு எடுத்துக் கொடுக்கிறவரில் லை, எவ்வளவு கூட்டம் வந்த போதும் கூட உட்கார்ந்திருக்கிற கல்லாவை விட்டு அசையக் கூட மாட்டார்,

கடைக்கு வந்தவர்கள் கூட கேட்பார்கள்,என்ன கடைக்கார மொதலாளி உக்கா ந்துருக்க யெடத்துலயே உங்கள ஆணி வச்சி அடிச்சிட்டாங்களா என,

அட போங்கம்மா,அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல,நானும் கடைக்குள்ள போயி மொகத்த நொழச்சிக்கிட்டேன்னா ஒங்களப்போல கடைக்கி வர்றவுகள வாங்கன்னு கூப்புடுறது யாரு?

மாஸ்டர் வரும் போது மட்டும் ஏன் எந்திரிச்சிப் போயி சரக்குப்போட போ றேண்ணா அவரு கடைக்குப் போயி வடை போட்டுட்டு மத்த மத்த வேலை களெல்லாம் முடிச்சிட்டு வீடு போக லேட்டாயிரும் அதுனாலத்தான் அவர மொத ஆளா அனுப்புறதே தவுர வேற அந்த நோக்கமும் கெடையாது.என பல சரக்குக் கடைக்காரரால் சுட்டிக்காட்ட படுகிற மாஸ்டர் வேலை பார்க்கிற டீக்கடையில் டீக்குடிக்க இவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Nov 25, 2017

புதுப்பையி,,,,

புதிதாக வாங்கிய பையில் சாப்புடுகிற பண்டம் வாங்குகிற பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்பது தெரியவில்லை.இவனுக்கு வாய்த்திருந்தது.

கனமான தன் உடல் விறைப்பு காட்டியும் உயரம் காட்டியும் கலர் காட்டியு மாய் இருந்தது.

பையின் மீது ஒரு முண்ணனி கம்பெனியின் விளம்பரம் ஒன்று பொரிக்கப் பட்டிருந்தது,கரடிப் படத்துடனும் பனி நிறைந்த இடத்துடனுமாய்.

பனி நிறைந்த இடத்தில் முளைத்து உருக்கொண்ட மரங்களை ஸ்பிர்ச் மரங் கள் என எங்கோ எப்பொழுதோ நாவல்களில் படித்ததாய் ஞாபகம்.

அந்த நாவல்களைப் படிக்க அந்நேரம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறான்.

காரணம் முதலாய் நாவல் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அதில் மன ம் ஊன்றி படிக்கிற அளவிற்கு இவனுக்கு புத்திக்கூர்மை அல்லது ஞானம் இருந்தில்லை,

கீழேகிடந்து எடுத்த பேப்பரை முழுதாக படிக்கவே இவனுக்கு ஒரு நாள் முழு க்க தேவைப்படுகிற பொழுது நூறு அல்லது நூற்றி ஐம்பது பக்க நாவலைப் படிப்பதென்பது பரமபிரயத்தன விஷயமாகவே ஆகித்தெரியும்.

அதெல்லாம் போய் கை ஊன்றி கரணம் அடித்து மனம் ஊன்றி படித்த போது வந்த சிக்கல் புது விதமாக இருக்கும் என இவன் கனவில் கூட நினைக்க வி ல்லை,

யாரிட்டமிருந்து புத்தகம் வாங்கி படிக்கலாம் என இவன் முழுதாக நம்பினா னோ அவரிடமிருந்து இவனுக்கு புத்தகம் கிடைப்பது தாமதமானது. அல்லது கிடைக்கவில்லை.

அப்புறம்தான்தெரிந்தது,தாமதத்திற்கும்கிடைக்காமல் போனதற்கான காரணத் திற்குமான விடை.

வேண்டுமென்றே புத்தகம் கொடுப்பதை தவிர்த்திருக்கிறார்,இவன் முழுவது மாய் நம்பிய மனிதர்,

பின்னர் அவர் பிடி விடுத்து வெளியுலகம் பழக்கமான பின் இவனைப்போல் கொஞ்சமாய் படிக்க ஆரம்பித்த ஒருவரது வீட்டில் போய் புத்தகங்கள் வாங்கி வந்தான்.

அவர் இவன் தங்கியிருந்த ஊரிலிருந்து பத்தாவது கிலோ மீட்டலிருக்கிற கிராமத்தில் ஓட்டு வீட்டில் வசித்தார்,விதவை தாயுடனும் திருமணமாகத தங்கையுடனுமாய்.

அவரிடம் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் வாரத்திற்கு ஒரு முறை அவர் டவுனுக்கு வரும் பொழுது இன்ன புத்தகம் இன்னார் எழுதியது கொண்டு வா ருங்கள்,,,,எனச் சொல்லி வாங்க வேண்டும்,இல்லையென்றால் இவன் போய் தான் வாங்க வேண்டும்,அவர் வீட்டில் இருக்கிற நேரமாய் பார்த்து.

வீட்டில் அவர் இருக்கிற நேரம் என்றால் வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வர இரவு ஏழு மணியாகிப் போகும்.

கோயில் பட்டிப் பக்கம் வேலை பார்க்கிறார்,அவர் வேலை முடிந்து இரவு கடைசி பஸ்ஸில்தான் வருவார்,

ஏழு மணிக்கப்புறம் அவரது ஊரில் இருந்து வர வேண்டும் என்றாலும் அவ ரது ஊருக்கு போக வேண்டும் என்றாலும் சைக்கிளில்தான் செல்ல வேண் டும்.

இவனும் புத்தகம் வாங்குகிற ஆவலில் அவர் வருகிற ஏழு மணி பஸ்ஸிற்கு முன்பே சென்று அவரது ஊரில் காத்திருந்தான் ஒரு மழை நாள் இரவு அவர் வரவில்லை,

வீட்டில் கேட்டதில் அவன் அப்படித்தான் அவ்வப்பொழுது ஏதாவது வேலை இருக்கிறது என வேலை பார்க்கிற ஊரில் தங்கி விடுவான் எனச் சொன்னார் கள்.

இவனுக்கானால் என்ன செய்வது எனத் தெரியவில்லை.காத்திருந்ததிலும் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டுசெல்லலாம் என முடிவு செய்திருந்த திலும் நேரமாகிப் போனது.

வாடகை சைக்கிள்,வயிற்றைக்கிள்ளும் பசி,தேடி வந்தவரை பார்க்க முடியாத வருத்தம்,வந்தது வேலை முடியவில்லை என்கிற ஆதங்கம்,எல்லாமும் ஒன்று சேர சைக்கிளை மிதித்தவனாய் அந்த ஊரில் எதாவது டீக்கடை இருக் குமா எனத் தேடிய போது எதிர்ப்பட்டவரிடம் கேட்கிறான்.

”என்னது டீக்கடையா பாதி ஊரு தூங்கிப்போன இந்த அர்த்த ராத்திரிப் பொ ழுதுல டீக் கடையாவது ஒண்ணாவது, ஊருக்குப் புதுசா எனக்கேட்டு விட்டு வந்த விஷயம் கேள்விப்பட்டதும் அவன் அப்பிடித்தான் நம்ம சொந்தக்கார பையதான், யெள ரத்தமில்ல,கொஞ்சம் அது இதுன்னு பேசிக்கிட்டு அலை வான்,ஆனா அவன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் தெரிஞ் சிக்க என்றவர் சும்மா பயமில்லாம போங்க தம்பி,யாராவது கேட்டா இன்னார் வீட்ல இருந்து வர்றேன்னு அந்த தம்பி பேரச் சொல்லுங்க,தம்பி பேரச் சொன் னப் பெறகும் ஒங்ககிட்ட ஒருத்தன் நொரண்டு இழுத்தான்னா அவன் இருக்கு றதா எப்பிடி,,,,எனச்சொல்லி அனுப்பியதும் நடந்தது இவன் புத்தகம் தேடி அலைந்த நாட்களில்,

பின்னாளில் இதெல்லாம் ஞாபகம் வருகிற பொழுதுகளிலும் புத்தகம் படிக் கிற நாட்களிலுமாய் புத்தகம் தந்து உதவியவரும் புத்தகம் தர மறுத்து ஒதுக்கிய வரும் ஞாபகங்களில் வந்து உருத்தரிப்பவர்களாய் ஆகிப்போகிறார்கள் தான் இது போலாய் ஸ்பிர்ச் மரங்களையும் வேறு சிலவற்றையுமாய் படங்களிலும் இன்னமும் தொலைக்காட்சியிலுமாய் பார்க்க நேர்கிற சமயத்தில்/

கைக்கும் வாய்க்கும் எட்டாத தூரத்தில் யாராலோ இருப்பு கட்டி வைக்கப்பட் டிருக்கிற போல கண்ணாமூச்சி காட்டியும் மினுக்கிட்டு தனம் பண்ணிக் கொ ண்டுமாய், இருக்காமல் கிடைக்கப்பெறுகிற பாக்கியம் நேரடியாய் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணத் தோணுகிறது,

“அடபோங்கப்பா,பாக்கியமாம்பாக்கியம்பெரிய,,,,,நம்மசொல்லிக்கிட்டுஅலைய வேண்டியதுதான்,வெக்கமில்லாமயும், வேலையத்துப் போயுமா, யாருக்கு வேணும் ஒங்க பாக்கியமும்,யோகமும்,ஒழைக்கிற ஒழைப்புக்கும் சிந்துற வேர்வைக்கும் பலன் கெடைச்சா போதும்ண்ணு தோணுது.,அது கெடைச்சிட் டாலே பெரிய பாக்கியம்ன்னு சொல்வேன்” நானு என்பான் நண்பன் சின்னச்சாமி.

“ஆனா நண்பா நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்னு வச்சாலும் கூட சீறி ல்லாத யெடத்துல கொஞ்சம் வளஞ்சி நெளிஞ்சிதான் போகவேண்டியிருக்கு, அது இல்லாம நேராத்தான் போவேன்னு சொன்னா முட்டிக்கிட்டும் மோதிக் கிட் டும் நிக்க வேண்டியதுதான் தெரிஞ்சிக்க,அது வம்பு அநியாயமுன்னு தெரிஞ்சி கூட அதை ஏத்துக்கிட்டும் கண்டும் காணாமத்தான் போக வேண்டியி ருக்கு. சமயத்துல,அது போலத்தான் நம்ம சிந்துற வேர்வைக்கும் ஒழைக்கி ற  ஒழைப் புக்கும் இருக்குற மரியாதை தெரிஞ்சிக்க” என்பான் அவனே/

முதலில் திண்பண்டம் எதுவும் வாங்குவதாய் எதுவும் எண்ணம் இல்லை இவனிடம்,

பாய் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிற வேளையாய் தோனிய ஒன்றா கவே இருந்தது, எதாவது வீட்டுக்கு வாங்கிப் போகலாம் என்பதாய்/

இப்பொழுதான் என இல்லை. சிறிது நாட்களாகவே இவனுக்குள்ளாய் அப்படி ஒரு பழக்கம் தானாய் உருவெடுத்து முளைத்ததாக/

சமீப நாட்களாய் வீட்டில் அதிக வேலை இருக்கிறது என சுணங்கிப் போகிறாள் மனைவி.

என்னதான் செய்வாள் பாவம் அவளும்.வீட்டு வேலை அவளை தின்று தீர்த்து விடுகிறது.அப்படியிருந்தும் கூட சமாளிக்கிறாள்தான்,தன்னை மீறிய உடல் வலியால் அல்லது ஏதோ மித மிஞ்சிய சோம்பேறித்தனத்தால் எப்போதாவது கடையில் வாங்கலாம் என சொல்லுவாள்,

கல்யாணியக்காதான் சொல்லுவாள் ”என்னடா இன்னைக்கி நைட்டுக்கு கடை பார்ச்சலாஎன,ஆமாக்கா,,,,,”எனதலைசொறிகிறசமயங்களில்பிடித்துவிடுவாள் ஒரு பிடி,

“ஏம்பா அவளும் மனுசிதான,அவளுக்கு இருக்குறதும் ஒடம்புதான,என்னவோ அவள் இரும்பால அடிச்சி வச்சது போல இல்ல பீல் பண்ணுற, என்னமோ போ,,,இவ்வளவு தயங்குறவன் என்ன இதுக்கு கல்யாணம் பண்ணிக்கிற,இல்ல நான் கேக்குறேன்,

“தெனம் தவறாம விடி காலையில எந்திரிச்சி வாசத்தெளிச்சி கோலம் போட்டு தூங்கிக்கிட்டு இருக்குற ஒனக்கும் புள்ளைகளுக்குமா காபி போட்டு தலை மாட்டுல வச்சிக்கிட்டு ஒங்கலயெல்லாம் மனசு நோகாம எழுப்பி ஒக்காரவச்சி காப்பி தண்ணிய குடிக்க வச்சிட்டு நீங்க குளிச்சி ரெடியாகுறதுக்கு முன்னாடி ஒனக்கும் புள்ளைகளுக்குமா சோறு எடுத்து வச்சி டிபன் ரெடி பண்ணி அதுல ருசி கூடி கொறைஞ்சிறாம பாத்து ஒன்னைய ஆபீஸிக்கும் புள்ளைங்கள பள்ளிக் கூடத்துக்கும் அனுப்புன பெறகு பாத்தரம் வெலக்கி ,துணி மணி தொவைச்சி மத்த மத்த வீட்டு வேலைகள கவனிச்சி பெசகாம செஞ்சி முடிச்சிட்டி ஆந்து ஒக்காருற நேரம் புள்ளைங்க பள்ளிக்கூடம் விட்டு வர்ற நேரமாகிப்போகுது,அப்பறம் நீ வந்துருவ ஆபீஸ் விட்டு/

”இதுலஅவஎங்கதான் ரெஸ்ட்டுக்கு சொல்லு,ஒன்னைய நம்பி வந்தவ கையில ஒருவேலைன்னு ஒண்ணும் கெடையாது,என்னையப் போல, ஒன்னொன்னுக் கும் அவ ஒன்னைய எதிர்பாத்துதா நிக்கணும்.ஒரு சேலை ஜாக்கெட்டு, துணி மணி வாங்குறதுலயிருந்து ஏதாவது ஒரு நல்லது பொல் லது வாங்கித் திங்கி றதுக்குக்கூட ஓங் கைய எதிர்பாத்துதான் நிக்க வேண்டியிருக்கும்,

“நீ என்னதான் சம்பளம் எல்லாத்தையும் அவ கையில குடுத்துட்டுப் போனா லும் கூட ஒண்ணொன்னுக்கும் அவ ஒண்ணையக் கேட்டுதான செய்ய வேண் டியிருக்கும் சொல்லு,

நானும்கிட்டத்தட்ட ஓங் பொண்டாட்டி போலதான், ஆனா ஒங்க மாமா என்ன செய்வாருன்னா,என்னையநம்பி எல்லாப் பொறுப்பையும் ஒப்படைச்சிருவாரு, என்னென்னமோ சொல்லுவாரு பேசுவாரு,எனக்கு அவரு பேசுறதுல பாதி புரியும்,மீதி புரியாது.ஆனா அவரு சொல்லுலயும் பேச்சுலயும் ஒரு ஞாயம் இருக்கும்,பொம்பளங்கள மதிக்கிறது போல இருக்கும்,அவுங்க இருப்புக்கு எதுவும் பங்கமோ இழிவோ வந்துறக் கூடாதுங்குற ஆழமான தீர்மானமும் பிடிவாதமும் இருக்கும்.அப்படியாப்பட்டவரையே சமயத்துல நான் கரிச்சிக் கொட்டுவேன்.சமயத்துல புடுங்கி வீதியில போடுவேன்,

”ஆனா அதுக்கு சரி சரின்னு தலையாட்டிக்கிட்டு சிரிச்சிக் கிட்டு நான் கோபப் பட்டது சரியில்ல அந்த நேரத்துலைன்னு பதனமா எடுத்துச்சொல்லி எனக்கு புரிய வைக்கிரதுங்குள்ள தலையால தண்ணி குடிச்சி அசந்து போவாரு மனுசன்.சரி ஏங் தப்ப ஒனர்ற அதே நேரம் அவருகிட்ட இருந்த தப்பவும் சொல்லிக் காட்டீட்டு பாரஸ்பரம் ரெண்டு பேரும் சரியாயிருவோம்.

”ஒங்க மாமா மாதிரி ஆக மாட்டா நீயின்னு எனக்கு உறுதியா தெரியும் சுட்டுப் போட்டாலும் அவரப்போல நீ வர மாட்ட,அப்பிடி ஆளும் நீ கெடை யாதுன்னு தெரியும். நீ அப்பிடி ஆள்க கூட சேர்க்க வச்சிகிர்றதில்லைன்னும் தெரியும். பின்ன எப்பிடி ஒனக்கு ஒங்க மாமாவப்போல சிந்தனை வரும்,சும்மா என்னை யப் பாக்குற நேரம் மாமா கிட்ட சொல்லி ஓங்கிட்ட பேருற பேச்சுலயும் சொல்ற சொல்லுலயும் பாதி அளவுக்காவாது ஏங்கிட்ட பேசச் சொல்லு க்கா ன்னு சொன்னா மட்டும் போதுமா சொல்லு,

“ஒனக்கு தினம் சாய்ங்காலம் ஆச்சுனா ஓங் பிரட்ண்சுக கூட சேந்துட்டுப் போயி ஒயின் ஷாப்பு பக்கம் போயி நிக்கணும் குடிக்கிறயோ குடிக்கலையோ அந்த வாடை பட்டாதான் தூக்கம் வரும் போல இருக்கும் ஒனக்கும்,

“என்னஓங் மாமாவவுடவா குடிச்சிறப் போற,ஒனக்காவது தெனசரி சாய்ந்தரம், அவருக்கும் காலம் நேரம் மணி எதுவும் கெடையாது, நெனைச்சா நெனைச்ச யெடம் போனா போன யெடம்,வந்தா வந்த யெடம்தான்,என்ன எங்க போனா லும் தண்ணி மயக்கத்துலயும் தண்ணி மப்புலயும்தான் இருப்பாரு.தீடிர்ன்னு எங்கயாவது விழுந்து கெடக்காருன்னு சொல்லுவாங்க,போயி ஆட்டோவுல அள்ளிப் போட்டுட்டு வருவோம்,

“ஒரு காலகட்டத்துல இதே வேலையா அவரு இருந்தது போலவும் தன்னை மாத்திக்கிறதுக்கு கடுகளவும் முயற்சி பண்ணாதது போலவும் தெரிஞ்சிச்சி,

”அதுக்காக சோத்துக்கு வழியில்லாம செலவுக்கு இல்லாம குடும்பத்த கஷ்டத் துல தவிக்க விட்டுறல, பெரியவ காலேஜிக்கு போனா,சின்னவன் பத்தாப்பு படிச்சான்,அதுக்கு எந்தவித பங்கமும் வந்துறல,என்ன குடும்பமானம்தான் காத்துல பறந்துச்சி,பாக்குறவுங்கள்லாம் என்ன ஒங்க வீட்டுக்காரரு இப்பிடி திரியிறாரமுல்ல வைக்கிறாரமில்லைன்னு ஒரே பேச்சு,பேச்சுன்னா பேச்சு லேசுப்பட்ட பேச்சுல்ல,நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி ரெக்க கட்டி பறந்த பேச்சா ஆகிப்போச்சி,

“யாராவது ஏங்கிட்ட தற்செயலா சௌக்கியாமன்னு கேட்டாக் கூட அவுங்க இத மனசுல வச்சிக்கிட்டுதான் பேசுறாங்கன்னு நெனைக்கிற அளவுக்கு ஆகிப் போச்சி.என்ன செய்யிறதுன்னு தெரியல எனக்கு.

“அது வரைக்கும் சங்கடப்படாத ஏங் பெரிய மகளும் ரொம்ப சங்கடப்பட்டு நின்ன ஒரு லீவூ நாளனைக்கி கறி எடுத்து சாப்புட்டுட்டு ஒக்காந்துருந்தப்ப மண்ணெண்ணக் கேனோட போயி நின்னோம் அவரு முன்னாடி,தொடந்து இப்பிடியே தண்ணியடிச்சிக்கிட்டு ரோட்டுக் காட்டுல விழுந்து எந்திரிச்சிக் கிட்டு திரிஞ்சிக்கின்னா எங்களகொளுத்திக்கிறதத்தவுர ரெண்டு பேருக்கும் வேற வழி தெரியலைன்னு அழுதுக்கிட்டும் கோபத்தோடயும் சொல்லி பேசிக் கிட்டு இருக்கும் போது தற்செயலா வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டு தம்பி மாமாவ தனியா கூட்டீட்டு போயிட்டாரு, எங்ககிட்டயிருந்து மண்ணெண்ணக் கேன புடுங்கிக்கிட்டு/

”அவரு அன் னைக்கி ஒங்க மாமாகிட்ட என்ன பேசுனாறோ என்னவோ, தெரி யாது, மறு நாளையிலயிருந்து மனுசன் குடிக்கிறத கொஞ்ச கொஞ்சமா நிறு த்தி இப்ப அந்த வாடைய கண்டாலே தூரப்போயிற அளவுக்கு பொடம் போட்ட மனுசனா மாறிப் போனாரு.

அப்பிடி அவரு மனச மாத்துனது அந்த தம்பிதானா இல்ல அவரா மாறிட்டா ருன்னு தெரியல,கண்டிப்பா அவரா மாறிருக்க மாட்டாரு,அந்த தம்பிதான் மாத்திருக்கும்.

“ஆனா அந்த தம்பி செஞ்ச பெரிய உபகாரத்துனால ஏங் குடும்பம் இன்னைக்கி தலை நிமிந்து நிக்குது,அதுக்கு தம்பிக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல.

“விசாரிச்சதுலஅந்தத்தம்பிஎதுவோபொதுஇயக்கத்துலஇருக்குறதாசொன்னாங்க, நானும் பாத்துருக்கேன்,அப்பப்ப,மொத்தமா வயசுப்பயல்களோட திரிவாப்புல, ஆனா இயக்கத்துல இருக்குறது,அதுக்கான வேலையா இருக்குறது பத்தி என க்கு தெரியாது,பலரும் சொன்னப்பொறகுதான் தெரியும்,

ஏங் வீட்டுக்காரர நல்ல வழிக்கு கொண்டு வரத்தெரிஞ்ச தம்பிக்கு இயக்கம் கட்டி பொதுவா என்னென்ன வேலைக செய்யணும்ன்னு தெரியாதா என்ன, அந்ததம்பிஎங்கஇருந்தாலும் நல்லா இருக்கணும் என காற்றில் கையெடுத்துக் கும்பிட்டகல்யாணியக்கா,சொல்லுவாங்க,சும்மாமோகமும்ஆசையும் அறுபது நாளும் முப்பது நாளுமுன்னு,என்னையக்கேட்டா அதெல்லாம் சுத்த கப்சா, வருசமெல்லாம் மோகத்தையும் ஆசையையும் பரஸ்பரம் ரெண்டு பேரும் சொமந்துக்கிட்டும்,கட்டிக்காத்துக்கிட்டும் இருந்திங்கின்னா வாழ்க்கை நல்லா இருக்கும்,

“அத விட்டுட்டு ஹோட்டல்ல சாப்பாடு வாங்க சலிச்சிக்கிறது, அவளுக்கு
உத வி பண்ண சலிச்சிக்கிறது இதெல்லாம் அர்த்தமில்லாதது என்பாள் நீ,,,,,,,,,,,ளமாக/

சாப்பாடு வாங்கி விடலாம் என முடிவாகிப் போனது,என்ன வாங்குவது, புரோட்டா தவிர்த்து ஏதாவது வாங்க வேண்டும் அது வாங்கி வாங்கி சலித்துப் போனது,

வெங்காய தோசை வாங்கி விடலாம்,சின்னவளுக்கும் பெரியவளுக்கும் விருப் பம் கொஞ்சம் அதன் மேல்.

தவிர்த்து ”இது போல ஓட்டல் சாப்பாடு சாப்புடணும்ன்னு பிரியமெல்லாம் இல்லை எனக்கு,நீங்க வாங்கீட்டு வர்ற பார்சல் மூலமா நாமெல்லாம் சாப்பு டுட்டது மாதிரியும் ஆகிப்போச்சி.அம்மாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்தது போலவும் ஆகிப்போச்சி இல்லையா என்பாள் பெரியவள்.

அதற்கு ஆட்பட்டாவது வாங்கியே ஆக வேண்டும் போல் இருக்கிறது, கடை யில் சொல்லி விட்டான்.சொல்லி விட்ட பண்டத்தை எதில் வாங்கிக் கொண்டு போவது தெரியவில்லை,

பை ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் ,சொல்லியதை கட்டிவைக்கச் சொல்லி விட்டு பஜாரில் போய் புதிதாக பை ஒன்று வாங்கி வந்தான்.

புதிதாக வாங்கிய பையில் சாப்புடுகிற பண்டம் வாங்குகிற பாக்கியம் எத்த னை பேருக்கு வாய்க்கும் என்பது தெரியவில்லை.இவனுக்கு வாய்த்திருந்தது.

Nov 19, 2017

தார்க்கீத்து,,,,,

கருத்துப் பருத்து நீண்டு ஓடிய தார்ச்சாலை அது,

ரயில்வே ஸ்டேசனின் நுழைவாயிலே அதன் துவக்கப்புள்ளியாய் இருந்தது. அங்குஆரம்பித்து பின்அது நீட்சி கொண்டு எங்கு போய் முடிகிறதென்பது தெரி யாமலும் தெரியவும் செய்யாமலுமாய்/

ரயில்வே ஸ்டேசன் எனச் சொல்லும் போதுதான் ஞாபகம் வருகிறது.ஒரு நாள் இரவு இரண்டு மணி வாக்கில் டீக்குடிக்கலாம் என இவன் இவனது அலு வலகத்தில் உடன் வேலை மதிவாணன் ராஜா இளங்கோ ராமு மற்றும் நான் கைந்து பேர்கள் சேர்ந்து வந்திருந்தார்கள்.

போன பினதான் தெரிந்தது, ஏன் இங்கு டீக்குடிக்க வந்தோம் என/

அவசர பணி காரணமாக அலுவகத்தில் இரவு தங்கி வேலை செய்ய வேண்டி இருந்தது.

இரவு தங்கி வேலை செய்தது இவனுக்கு புதிது.ஆனால் அவர்களுக்கு பழசு, இவன் தவிர்த்த அவர்கள் நான்கு பேரும் இங்கு வேலைக்கு புதிது,ஆனால் இதற்கு முன்னாக அவர்கள் வேலை செய்த தனியார் கம்பெனியில் இதெல் லாம் வழக்கமானதுதான் என்றும் மிகவும் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சிதான் இது என்றும் சொன்னார்கள்.

சரிதான் அதுதான் இரவு பணி அலுவலத்தில் ஒரு மாதத்திற்கு எனச்சொன்ன போது தயங்காமல் சம்மதித்தார்கள்.

இவனுக்கு புதிதென்பதால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது,மற்ற படி வேறொ ன்றுமில்லை.

இரவுப் பணி துவங்கிய நாட்களில் இவனுள் இருந்த தயக்கமும் கொஞ்சமே யான துவளலும் பணி ஆரம்பித்த இரண்டாவது தினம சரியாகிப் போகிறது.

வழக்கமாய் இரவு பத்து மணிக்கு ஆரம்பிக்கிற பணி முடிய காலை நான்கு ஆகிப் போகும்,

ஒரு நாள் யாரும் எதிர்பாராத விதமாக இரவு இரண்டரை மணிக்கெல்லாம் முடிந்து போகிறது.

இவனுக்குள்ளானால் பெருத்த சங்கடம்,இந்நேரம் வீட்டிற்கு போவதானால் ஐந்து கிலோ மீட்டர் மனித நடமாட்டமற்ற பாதையில் போக வேண்டும். டவுனுக்குள்தான் என்றாலும் கூட மற்ற எந்த பயமும் இல்லை,ஆனால் நாய் களின் பயம்தான் வெகுவாய் ஆட்டிப் படைக்கிறது,

எங்கு பார்த்தாலும் எப்பொழுது பார்த்தாலும் கொத்துக்கொத்தாக நாய்கள் தன் முனைப்பு காட்டி இரை வேண்டியும் இருப்பிடம் தேடியுமாய் அலைந்து திரிந் து கொண்டிருக்கிறதுதான்.

இதில் எது நல்லது எது கெட்டது என கூட்டம் கட்டி திரிகிறவற்றின் அருகில் போய் கேட்டு விட முடியாது.கேட்டு விடவும் கூடாது போல் இருக்கிறது.

அதன் பாஷையில் சொல்வதானால் எது நல்லது எது கெட்டது என அறுதியி ட்டெல்லாம் சொல்லி விட மாட்டோம்.

நேரமும் காலமும் சமயமும் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியப்படிதான் நடந்து கொள்வோம்.

சாம தண்ட பேதம் எங்களுக்கும் தெரியும் .அது மனிதர்களான உன்க்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தைகளல்ல.தெரிந்து கொள்ளுங்கள்.’இனி இது போலாய் வந்து எங்களது அருகில் வந்து யார் நல்லவர் யார் கெட்டவர் என புரிந்து கொள்ள முயற்சி மேற் கொள்ளாதீர்கள்,ஜாக்கிரதை எனஒரு முறை லொள்,,,லொள் என குரைத்து அனுப்பியது ஞாபகம் வருகிறது.

அந்தஞாபகத்துடனும் மிதமிஞ்சிய கிலியுடனுமாய் இரண்டரை மணிக்கு பணி முடிந்த அன்று இரவு வீடு நோக்கி பயணிக்கிறான்,

போகிற வழியில் இருக்கிற ரயில்வே கேண்டீனில் டீ சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தான், எவ்வளவு நேரம்தான் அப்படி அமர்ந்திருக்க,இரவு ரொந்து பணியில் இருந்த ரயில்வே போலீஸ் சந்தேகமாகப் பார்க்க வேண் டாம் அந்த சந்தேகம் என்கிற நினைப்பில் எழுந்து போய்விட்டான்,இன்னும் இரு ஒரு மணி அல்லது ஒன்னறை மணி நேரம் இருந்தால் போதும்.விடிந்து விடும் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்து விடும்,பாலடிக்கிறவரிலிருந்து ரயிலடி க்குப் போகிறவர் வரை கொஞ்சம் நடமாட்டமும் கூடிப் போகும்,கொஞ்சம் தைரியமாகவும் போய்க்கொள்ளலாம்,

அது அல்லாமல் இப்போது போய் நாய்கள் கடித்து வைத்து விட்டால்,,,இது போல் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வந்த இவனது பக்கத்துத் தெருக்காரரை போஸ்ட் ஆபீஸ் முக்கு திரும்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின் ஓடி துரத்திய நாய்கள் எட்டிக்கடித்து விட்டது.கிட்டத்தட்ட ஐந்து நாய்கள் வரை துரத்தியிருக்கிறது,இதில் கொடுமை என்னவென்றால் துட்டுப்பட்ட இடம் போஸ்ட் ஆபீஸ் முக்கு என்றால் கடி பட்ட இடம் கிட்டத் தட்ட இருநூறு அடி தாண்டிதான்.அப்படியானால் முதலில் குரைத்து துரத்திய நாய் ஒன்றாகவும் கடித்த நாய் வேறொன்றும் என அர்த்தம் ஆகிறது.

அது அப்படிதான் இரவின் புழுக்கத்தில் ரோடு முழுக்கவும் வரிசை கட்டியும் அது அல்லாது ஆங்காங்கேயுமாய் ஒன்றிரண்டாய் படுத்துக்கிடக்கிற நாய்கள் நான்கும் ஐந்துமாய் இருக்கின்றன,ஒரு முனையில் ஒன்று குரைத்து அந்த வழியில் வருகிற வரை விரட்ட ஆரம்பித்தால் போதும் மற்றதெல்லாம் அப்ப டியே வரிசையாய் தொடர்ந்து கொள்ளும்.முதலாவது நாய் கும்பலால் விரட் டுப் பட்டவரை இரண்டாவது,மூன்றாவது நான்காவது,,,,என வரிசை கட்டி படுத்திருக்கிற கும்பல் விரட்டத் தொடரும்,அந்த சப்தம் சமயத்தில் தெருவில் படுத்திருக்கிற நாய்களையும் தொற்றி உசுப்பி விட்டு அவைகளையும் பின் தொடரச் செய்து விடுவதுண்டு.துரத்துப்படுபவர் ஆட்டோவிலோ இல்லை காரிலோ போனால் தப்பித்தார்,மாறாக இரு சக்கர வாகனத்திலோ இல்லை சைக்கிளிலோ சென்று விட்டாரானால் தொலைந்தார்.

ஒரு தடவை ஆட்டோவில் சென்றவரையே அந்தப்பாடு படுத்து எடுத்து விட்டதாம்,

அவரால் ஆட்டோவை ஓட்ட முடியாமல் போஸ்ட் ஆபீஸ் தாண்டி இருக்கிற பெட்ரோல் பங்கில் ஆட்டோவை சிறிது நேரம் நிறுத்தி விட்டு பின் எடுத்துச் சென்றிருக்கிறார்,

அந்த நிலை தனக்கு வேண்டாம்,நாய் கடியைப்பற்றி பலபேர் பேச பலவாறாக கேட்டிருக்கிறான்.

அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றாலும் கூட இப்பொழுது வீட் டிற்கு போய்தான் ஆக வேண்டும்.

என்ன செய்ய,,,,,?குருட்டுத்தனமாக வரவழைத்த தைரியத்தின் கைபிடித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இவன் நினைத்தது போலவே போஸ் ஆபீஸ் முக்கு வரவும் நாய்களின் படை இவனை சூழ்ந்து துரத்த் ஆரம்பிக்கிறது,முதலாவதாக இவனைப்பார்த்து குரை க்க ஆரம்பித்ததென்னவோ ஒரு நாயோ இல்லை இரண்டோதான்,பின் அணி சேர்ந்து கொண்டு சாலை முழுவதுமாய் வரிசை கட்டி படுத்திருந்த நாய்கள் கை கோர்த்துக் கொண்டு இல்லையில்லை குரல் கோர்த்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தன,

வேறு வழியில்லை வண்டியை திருப்பி வேகத்தில் வந்தவன் சொந்தக்காரர் வீட்டில் படுத்திருந்துவிட்டு அதிகாலையின் அரையிருட்டில் எழுந்து வந்தான்.

தார்ச்சாலையில் பயணிப்பதென்பது இவனுக்கு மிகவும் பிடித்தமானதாக/

அதற்கு காரணம் தன்னைப் போலவே இருக்கிற அதன் கருநிறமும் அதன் மீது நடமிடுகிற மனிதர்களும் ,தார் ரோட்டில் ,முள்ளு முள்ளாய் நீட்டிக் கொ ண்டு அழகுகாட்டிச்சிரிப்பதுபோலிருப்பதுவுமானபொடிப்பொடி கற்கள்தான். எனவும் அதுதாண்டிஇப்போதைக்குவேறெதுவும் இல்லை எனச்சொல்லி விடத் தோணு கிறது,

இல்லையென்றால் நீண்டு போகிற வம்புப்பேச்சு கிளை முளை த்து இஷ்ட த்திற்கு திரிந்து போய் கிடக்கும். பின் அதன் இடர்பாடுகளில் சிக்கித்திணறி மூச்சு முட்டி சங்கடப்பட வேண்டியிருக்கும்,

அதிலும் இந்த மதனராமன் இருக்கிறானே,,அடேயப்பா,,,,,நூல் விட ஆரம்பித் தால் நிறுத்துவது சிரமம்,விடுவான் விடுவான் விட்டுக்கொண்டே இருப்பான், ஏய் என்னப்பா சும்மா தார் ரோடு அதோட கருப்பு நிறம் தடிமன் அடர்த்தி நீட்டிக் கிட்டிருக்குற கல்லு அது இதுன்னு கதை சொன்னாப்புல நம்பீருவமா நாங்க, அதெல்லாம் அங்கிட்டு வச்சிக்க தம்பி என்பான் பெருங்குரலெடுத்து,

அவன் சொல் குறித்தோ பேச்சு குறித்தோ இவனிடம் கோபம் இருந்ததில்லை எப்பொழுதும்/

ஆனால் ஏன் இப்படியெல்லாம்பேசுகிறானே எசக்கேடாக என்கிற ஆதங்கமும் வருத்தமும் இருந்ததுண்டு அவன் பேசுகிற சமயங்களில்.

அவனிடம் இது குறித்து கேட்டு விட நினைக்கிற சமயங்களில் அவன் சிக்கு வதில்லை, அல்லது அது சம்பந்தமான பேச்சை ஆரம்பிக்கிற நேரங்களில் தப்பித்து போய் விடுவான் அந்த இடத்தை விட்டு.

ஒரு மழை நாளின் மாலை வேலையாய் சிவன் கோவில் அருகில் இருக்கிற டீக்கடையில் நின்று கொண்டிருந்தபொழுதுவந்துவிட்டான்.

இவன் இருப்பதை கவனித்தானோ இல்லை கவனிக்கவில்லையோ இவனுக் கானால் அந்த ஞாபகமோ இல்லை அது பற்றி கேட்க வேண்டும் என்கிற முனைப்போ கொஞ்சம் கூட இல்லை,

கிட்டத்தட்டமறந்து போன ஒன்றைப் பற்றி ஏன் இந்த நேரத்தில் கேட்க வேண் டும் என்கிற நினைப்பில் டீக்குடித்துக் கொண்டிருந்த போது அவனாகத்தான் ஆரம்பித்தான் பேச்சை/

”டேய் தம்பி ஓங்கிட்ட அப்பிடியெல்லாம் பேசனுமுன்னு விருப்பம் இல்லை எனக்கு,சும்மா ஜாலிக்காக பேசுறதுதான்,நான் உண்மையில அப்பிடிப் பட்ட ஆளும் இல்லை அது ஒனக்கு நல்லாவே தெரியும்.”

”ஓங்கிட்ட பழகுனது கொஞ்ச நாள்தான்னாலும் கூட என்னையப் பத்தி முழுசா தெரிஞ்சி வச்சிருப்பைன்னு நெனைச்சேன்,ஆனா நீயி என்னடான்னா என்
னோட வெளையாட்டுத்தனமான பேச்சையெல்லாம் வெனையா நெனைச்சிரு க்குற,ஏங் நெனைச்சஎதுக்குநெனைச்சைன்னுநான்கேக்கப் போறது இல்லை, அது ஏங் வேலையும் கெடையாது”

“ஏன்னா தனக்குத் தெரிஞ்ச ஒவ்வொரு மனுசனப் பத்தியும் ஒவ்வொரு வித மா நெனைக்கிறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் உரிமை உண்டு,அத தடுக்கவோ இல்லை, அதப் பத்தி கேக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கெடையாதுன் னு நெனைக்கிறவன் நானு,”

“அப்பிடி தடுக்கிறதுனால நெனைக்கிற நெனைப்பு நின்னு போயிறப் போறது கெடையாது.அதுனால ஒரு பிரயோசனமும் கெடையாது. அதுக்குத்தான் ஓங் கிட்ட இத்தன காலமும் எதுவும் பேசாம இருந்தேன்,இல்லை பேச சந்தர்ப்பம் வாய்க்கிறப்ப கூட நானா கழண்டு ஓடிருக்குறேன் ஓங்கிட்ட இருந்து, எதுக்குப் போயிக்கிட்டு வம்படியா பேசிக்கிட்டுன்னு,,,,ஆனா இன்னைக்கி தானா சந்தர் ப்பம் அமைஞ்சிருக்குது, விட்டுறலாமா அதை,”

“இன்னைக்கி ஓங்கிட்டயிருந்து நானோ இல்லை ஏங்கிட்டயிருந்து நீயோ தப்பிச்சி ஓடிற முடியாது, ஏன்னா மழை பேஞ்சிக்கிட்டு இருக்குது வெளியில, வா நீயும் நானுமா பேசுவம்,”

“இன்னொரு டீகூட சொல்லு சாப்புடுவம்,இப்ப என்ன கொறஞ்சி போயிறப் போகுது.நான் பொதுவா பெரும் பாலான நாட்கள்ல ஒரு டீயக்குடிச்சி முடிச்ச கையோட இன்னொரு டீயை யும் சேத்து சாப்புடுற ஆளு,”

”வீட்டுல அப்பத்தான் டீக்குடிச்சி முடிச்சி வந்துருப்பேன்,அப்படி வந்தாக்கூட இங்க கடைக்கு வந்து டீ சொன்ன ஒடனே அப்பிடி ஒரு ஆசையாகிப்போகுது அல்லது தேவையாகிப்போகுதுன்னு நெனச்சி நானா செஞ்சிக்கிறது உண்டு. அதுஅந்த நேரத்தைய தேவையா,இல்ல அந்த நேரத் தோட என்னோட மனோ நிலையான்னு தெரியல, மொத்தத்துல டீக்குடித்து வாழ்வாறே வாழ்வார், மற்றவரெல்லாம் டீயின் ருசி அறியாது பின் செல்வார்ங்குற நெனைப்பும் எனக் குள்ள ஆழப்பதிஞ்சிருக்குறது உண்டு,”

“சரி அது எதுக்கு இப்ப ,நா பொதுவா நீ நென்னைக்கிறது போலவும்,நீயி நெனைச்சி வருத்தப் படுறது போலயும் கெடையாது நானு,சும்மா ஓங்கிட்ட கேலிக்காக ரெண்டு கெட்ட வார்த்தை பேசுவேனே ஒழிசு நான் அந்த மாதிரி தப்பான ஆளு கெடையாது. தெரிஞ்சிக்க,,,,ஆமா”என மதன ராமன் சொல்லும் போது அய்யய்யோ அதெல்லாம் இல்லைண்ணே,நீங்க பேசுனது வருத்தம் இல்லை எனக்கு,நான் அப்பிடி வருத்தப்படுற ஆளும் கெடையாது,.அது ஒங்க ளுக்கும் தெரியும்,பின்ன எதுக்கு இது போல சொல்றேன்னா இப்பிடியே போற யெடம் வர்ற யெடம் போயி ஒக்கார்ற யெடம் பூராவும் கொச்சையா பேசிக் கிட்டே திரிஞ்சிங்கின்னா நாளைக்கி கெட்டுப்போகப்போறது ஒங்க பேருதானே ஒழிய ஏங் பேரு இல்லை தெரிஞ்சிக்கங்க,” என்பான் இவன்.

இவனும் மதனராமனும் பரஸ்பரம் இப்படி பேசிக்கொள்வது புதிது இல்லை தான் என்றாலும் கூட இவர்களது பேச்சின் ஊடாக ஏதோ பெரிதாக நடந்து விடப்போகிறது என்கிற நினைப்புடன் சுற்றி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிப்போகும் அந்தக் கணங்களில்/

மிஞ்சிப் போன ஏமாற்றத்தை கையில் பிடித்துக்கொண்டு அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் ஆகிப் போவார்கள் அவர்கள். தொடர்ச்சி யான அவர்களது பேச்சின் ஊடாக கடைசியாய் கலைந்து போய் விடுவார்கள் பேச்சின் மிச்சத்துடனும் டீயின் ருசியுடனுமாக/

பொதுவாக இவனுக்கு சிமிண்ட் ரோட்டை விடதார்ரோடுகள் மிகவும் பிடித்து போனதற்கு காரணமே இவனது சொந்தங்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் ஒரு காலத்தில் தார் ரோடு போடுகிற வேலையில் இருந்த காரணத்தினால் தான்,

இவன் நாலாவது வகுப்போ ஐந்தாவது வகுப்போ படிக்கும் போது என்கிறதாய் நினைவு,

காலையில் பொழுது விடிந்து விடியாத பொழுதில் வேலைக்குப்போய் விட்ட அம்மாவிடமும் அப்பாவிடமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது சென்று காசு வாங்கிப் போவான் ஏதாவது வாங்கித்திங்க,என,,,/

அம்மாவும் அப்பாவும் வைது கொண்டும் கரிசனம் கொண்ட பேச்சுடனுமாய் காசை எடுத்து கையில் தருவார்கள்.கண்டத வாங்கித்திங்காதடா என்கிற பேச்சுடனும் அக்கரை சுமந்த மனதுடனுமாய்,,/.

அப்போது மனதில் குடி கொண்ட தார் டின்னும் அதன் அடர்த்தியான வாச மும் தார் காய்ச்சுகிற அடுப்பும் அதன் வெந்தனலும் தார் வாசனை தாங்கி வேலை செய்து கொண்டிருக்கிற மனிதர்களும் அவர்களது சங்கடமான உடல் மொழி யும் வேலை நடக்கிற தளமும் இவன் மனம் பிசைந்ததாய் அமைந்து போன துண்டு பல நாட்களில்,

அதிலும் அவனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சோறு கொண்டு போய் கொடு க்கவும்,காசு வாங்கவுமாய் போகிற நாட்களில் பார்க்கிற இது போலான காட் சிகள் இவனை வெகுவாக பாதித்து விடுவதுண்டுதான்,

காலையில் கோழி கூப்பிடும் முன்பாக எழுந்து விடுகிற அம்மாவும் அப்பாவும் பாட்டியிடம் சோறு பொங்கி கொடுத்து விடுமாறு சொல்லி விட்டுப் போய் விடுவார்கள்.

அப்படியாய் போய் விடுகிற நாட்களிலும் இவனது ஊரை ஒட்டிய பகுதிகளில் ரோடு போடுகிற வேலை நடக்கிற நாட்களிலும் இவன்தான் இவனது அம்மா விற்கும் அப்பாவிற்குமாய் சாப்பாடு கொண்டு போவான்.

அப்பா காலில் சாக்கை கட்டிக்கொண்டு அழுக்கு கைலியுடனும் அழுக்குச் சட்டையுடனும் சட்டையிலும் கைலியிலுமாக பொட்டடித்துத் தெரிகிற தார்ப் புள்ளிகளுடன் ரோட்டில் குவிக்கப்பட்டிருக்கிற ஜல்லிகளை பரப்பிக் கொண்டி ருப்பார்,

தலையில் சுருமாடு சுற்றிய புடவையுடனும் காலில் சுற்றப் பட்டிருக்கிற சாக்குடனும் ஜல்லிகளை தட்டில் அள்ளி சுமந்து கொண்டு வருவார்.அப்போது மனம் பதிந்த அம்மா அப்பாவின் நினைவுகள் தாலாட்டுகிற இப்போதும் தார் ரோட்டைப் பார்க்கிற போது மிகவும் பிடித்துப் போகிறது.

அப்படியாய் தினமுமாய் பயணம் செய்து செல்கிற ரோட்டின் வலது ஓரமாய் அமைந்திருந்த கடையில் டீக்குடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் ரோட்டி ன் ஓரமாய் சென்ற போக்கிடம் தெரியாமல் அங்கும் இங்குமாய் திரிந்து கொண்டிருக்கிறது.

Nov 13, 2017

சூழ்கொண்டவைகளின் மிச்சமாய்,,,,/

வீடும் வீடு சுமந்த நினைவுகளுமாய் சூழ்க்கொண்ட ஒரு விடுமுறை நாளின் மாலை நேரமாய் பஜாருக்குக்கிளம்பும் போது மனைவியிடம் சொல்லிக் கொ ண்டு கிளம்புகிறான்.

அப்பொழுதான் படுத்து எழுந்த மதிய நேர தூக்கத்தின் கலிப்பும் அலுப்பும் அழுக்கும் போக குளித்தும் பல் துளக்கி விட்டுமாய்த்தான் கிளம்புகிறான்.

அப்படியானதொரு பழக்கம் இவனில் எப்படி எப்பொழுது வந்து ஒட்டிக் கொ ண்டது எனத் தெரியவில்லை.விடுமுறை தினங்களில் கொஞ்சம் தாமதமாக எழுந்து வீட்டிலிருக்கிற வேலைகளில் கொஞ்சம் கை கொடுத்துவிட்டும் குளி த்துவிட்டும்வந்து அப்படியே மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு தூங்கிப்போகிற நாட்களில் எழுந்ததும் திரும்ப ஒரு தடவையாய் குளித்துவிட்டுதான் மற்ற மற்றதான வேலைகளைப் பார்ப்பான்.

மனைவி கூட சப்தம் போடுவாள்,”ஒரு மனுசன் ஒரு நாளைக்கு எத்தனை தடவதான் குளிக்கிறதுன்னு கணக்கு இல்லையா சாமி,என்னவோ கொடுமை தான் போங்க ஒங்களோட என்ன அப்பிடியா வந்து ஒடம்புல அழுக்கு வந்து ஒட்டிக்கிருது என,,,/

இப்படித்தான் வீட்டில் கரண்ட் இல்லாத ஒரு நாளில் காலை குளித்து முடித் து விட்டு பஜாருக்குப்போய் விட்டு வந்து திரும்ப ஒரு தடவையாய் குளித்து முடித்து விட்டு மதியம் சாப்பிட்டு விட்டுப் படுத்தவன் எழுந்ததும் பாத்ரூம் போய் விட்டான் குளிப்பதற்கு,

அன்றும் அது போல்தான் சபதம் போட்டாள் மனைவி,”என்ன கொஞ்சமாச்சும் நெனைச்சி பாக்க வேணாமா இருக்குற நெலைமைய,இப்பிடியா செய்வீங்க, இந்தகரண்டு இல்லாத நேரத்துல,இருக்கிற கொஞ்ச நஞ்ச தண்ணியவும் காலி பண்ணீட்டு போயிட்டீங்கன்னா வீட்டுப் பொழக்கத்துக்கு தண்ணி வேணாமா. கரண்டு இல்லாம மோட்டரு வேற போட முடியல,

”இனி நான் தெரு முக்குல இருக்குற அடிகொழாயில போயி தண்ணி அடிச்சி எடுத்துக்கிட்டுவரணும்,மாங்கு,மாங்குன்னு வீட்டுல இருக்குற எல்லா வேலை யவும்பாத்துட்டு இப்பிடி தண்ணிப்பானைய தூக்கீட்டு அலைய வேண்டி யதா வேற இருக்கு,நீங்களாவது புள்ளைங்களாவது வருவீங்களா தண்ணி எடுக்க ன்னு பாத்தா அதுவும் கெடையாது,புள்ளைங்க படிக்கப்போறேன்னு ஒக்காந் துருவாங்க,நீங்க என்னமோ வேற்றுகிரகத்துல இருந்து வந்த மனுசன் மாதிரி வீட்டு வேலைக எதுலயும் பட்டுக்கிறமா இருந்துக்கிறுவீங்க,நான் ஒருத்திதா ன் கிறுக்கச்சி மாதிரியும் நேந்துவிட்டது போலவும் வேலைகளச்செய்யணும்,

“இந்தமாதிரிகரண்டு இல்லாம வெளியில தண்ணி எடுக்குற நாட்கள்லயாவது வந்து கூடமாட ஒத்தாசைக்கு நிக்கக்கூடாதா,என்னமோ எங்க தலையிலதான் எழுதி ஒட்டீருக்குற மாதிரி எந்த வேலையவும் தொடாம கையக்கட்டிக்கிட்டு உக்காந்துட்டு கையக்கட்டிக்கிட்டு எந்திரிச்சி போயிட்டா எப்பிடி,,,,?

“இந்த லட்சணத்துல ஒங்களையோ இல்லை ஒங்க புள்ளைங்களையோ ஒரு வேலை சொல்றதுங்குள்ள ஒங்க அம்மாவுக்குள்ள கோவம் பொத்துக்கிட்டு ள்ள வந்துருது கோவம்.,,,,என கொஞ்சம் பொய் கோபம் காட்டி பேசி முடிப்பாள்

அவளதுபேச்சில்உரைக்கிற வாஸ்தவமும் சூடும் அந்த வீட்டில் எப்பொழுதும் நிலை கொண்டதாகவே,,/

பொதுவாகவே அப்படியொரு பழக்கமாகிப்போனது, முன் பெல்லாம் இப்படியி ல்லை, நாலாவது தெருவிலிருக்கிற மாந்தோப்பு அக்கா சொன்ன பிறகுதான் இப்படியெல்லாமும்,கிளம்பும் போது சொல்வது ,நீ வச்ச சோறு கொழம்பு நல்லாயிருக்கு,,,கூட்டுபிரமாதம்,,,,போன்றவார்த்தைகோர்வைகள்இவன்மனதில் படம் விரித்து வார்ப்பு கொண்டும் உருக்கொண்டுமாய் ஆகித் தெரிகிறது.

அது போலான உருக்கொள்ளல்கள் சமயா சமயங்களில் சரியாயும் சரியற்று மாய் ஆகிப்போகிற போது ஏற்படுகிற சங்கடங்கள் இவனை வாதிக்காமால் இருந்ததில்லை,

அதையெல்லாம் இருகிய முகத்திற்குள்ளாக மறைத்து வைத்து காத்து வந்து ள்ளான்.

சின்ன மகள்தான் சொல்வாள்,”என்னப்பாதீடீர்ன்னு என்னைக்கும் இல்லாத திரு நாளா திடீர்ன்னு மனம் திருந்திய மைந்தன் மாதிரி ஆகிப் போயிட்டீங்க, எங்க யாவது வெளியில போனா அம்மா கிட்ட போயிட்டு வர்றேன்னு சொல் லீட்டுப் போறீங்க/ அம்மா சமையல பாராட்டுறீங்க,கடையில போயி காய்கறி வாங்கீட்டு வர்றீங்க, பாஜாருக்குப் போறப்ப அம்மாவ டூவிலர்ல வச்சி கூட்டீ ட்டுப்போறீங்க,அம்மா கூட கோயிலுக்கெல்லாம் போறீங்க,சாமி கும்புட்டு க்கிறீங்க, நெத்தியில திருநீறு பூசிக்கிறீங்க,குங்குமம் சந்தனமெல்லாம் வச்சிக் கிறீங்க, அடுத்தடுத்ததா என்ன செய்யிறதா உதேசம் மிஸ்டர் அப்பா அவர்க ளே எனச்சிரிப்பாள் சத்தமெடுத்து.

மகள்சொல்லிலும்வாஸ்தவம்இல்லாமல்இல்லை.கோயிலுக்குப்போக வேண் டும் என அவள் சொல்கிற சமயங்களில் ”பஸ்ஸீல போயிட்டு வந்துரு,,,”என் பான்,அதையும் மீறி கூட்டிப்போகிற என்றாவது ஒரு நாளன்றின் போது அவளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு விட்டு இவன் கொஞ்சம் தள்ளி இருக்கிற கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.

அவள் சாமி கும்பிட்டு வரும் வரை கடையில் உட்கார்ந்திருந்து விட்டு பின் கூட்டிப் போவான்,

வழக்கமாக போகிற கடை என்பதால் கடைக்காரரும் கேட்டு விடுவார்,

“என்ன சார்,கோயிலுக்கு வந்தீங்களாக்கும்,ஏங் சார் நீங்களும் சேந்து போக வேண்டியதுதான,அது என்ன அவுங்கள மட்டும் விட்டுட்டு இங்க வந்து உக்கா ந்துக்கிறது என்கிற கடைக்காரரின் பேச்சிற்கு சிரிப்பான்,இல்லையென்றால் தெய்வத்தக் கும்புடப் போன தெய்வத்த நான் கும்புட்டுக்குறேன் என்பான்.

சாரு இப்பிடியே பேசி சமாளிக்கப்பாக்குறாருடா,விடுவோம் எனச்சிரிப்பார்கள்.

அவள் சாமி கும்பிட்டு முடிந்ததும் செல்லில் சொல்லுவாள்.போய் கூட்டிக் கொண்டு போவான்,

இதில் சிறிதாய் நடந்த மாற்றமாய் போன மாதம் கடைசி சனிக்கிழமையன்று அவளுடன் சேர்ந்தே கோயிலுக்கு சென்று வந்தான்,

வருடங்கள் பல கடந்து அன்றுதான் நீளமாக நின்ற வரிசையில் நின்று சாமி கும்பிட்டு விட்டு பிரசாதமும் வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தான்,

வாங்கிய பிரசாதத்தை இவனும் மனைவியுமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இவனைப்போலபிரசாதம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களி லும்,நீண்டவரிசையில்நின்றுகொண்டிருந்தவர்களிலும்தெரிந்தவர்கள்நிறையப் பேர் தென் பட்டார்கள்.

இனி தெரிந்தவர்களையும் சொந்தக்காரர்களையும் பார்க்க வேண்டுமென்றால் கோயிலுக்கு வந்து விடலாம் போலிருக்கிறது.

”ஏய் போடி அதிகப் பிரங்கி புடிச்சவளே,என்னமோ மேடையில பிரங்கம் பண் ணுன மாதிரியில்ல பண்ணிக்கிட்டு இருக்கா,என இவனது மனைவி மகள் பேசுகிற சமயங்களில் சப்தமிடுவாள்.

அது போலான சமயங்களில் இவனுக்கு கொஞ்சம் பெருமையாகக்கூட இருக் கும், ஆமாம் இவனுக்குக்காகப் பேச அப்பிராணியாய் ஒரு ஜீவன் இருக்கிறது என்பதை காணும் பொழுதும் பார்க்கிற சமயங்களிலுமாய்,

ஆனால் மனதினுள்ளாய் மெலிதான ஒருசங்கடம் இருந்ததுண்டுதான் அவள் அப்படியாய் பேசுகிற சமயங்களில்,,,,/

அவன்சொல்வான் ”சரிவிடுஇப்பஎன்னபேசட்டும்பேசுற அவளஏங்தடுக்குற”,,, என அவளை தூக்கிக் தோளில் வைத்துக் கொள்வான்.

“பேசட்டும்,பேசட்டும்,,,,இப்பப் பேசாமா எப்பப் பேசப் போறோ சொல்லு,எனக்கு ஒரு தீராத ஆசை ,அது தீர்ற ஆசை யா இருக்கலாம் இல்ல தீராத ஆசையாக் கூட இருக்கலாம்ன்னு வையேன்/ இப்பிடி வீட்ல பேசுற இவ பள்ளிக் கூடத் துல பொது வெளியில மேடையில பேசணும் ,நம்ம ரெண்டு பேரும் அதை கேட்டு கண்ணீர் முட்டவும் மனசு நெறஞ்சி போயிமா நின்னு பாக்கணும்.அந்த நாளு நம்ம வீட்டுல வரணும்ன்னு நெனைக்கிறேன்,வருமா வராம போகுமா ன்னுதெரியல, இப்போதைக்கு வருமுன்னு நம்புவோம்.அதுவரைக்கும் ஓங் சொல் படி அவ ஒரு பிரசங்கியாவே இருந்துட்டு போகட்டும் விடு இப்போதை க்கு” எனவும் என்ன நம்ம ஊக்குவுகிறதுலயும் நடத்துறதுலயும் தான் இருக்கு அவ வளர்ச்சி” என முடிப்பான்,

“அதெல்லாம்ஒண்ணும்வேணாம்பிரங்கியாவோ,வேறஎதுவாவோஆக வேணாம், நல்லாபடிச்சி நல்ல மார்க் எடுத்து முன்னுக்கு வந்தாபோதும்,படிச்ச படிப்புக்கு தெய்வாதீனமா எங்கிட்டாவது ஒரு வேலை கெடச்சின்னா நல்லது, இல்லை ன்னாக்கூட பெரிசா ஒண்ணும் இல்ல,கூடுதலா நாலு பவுனப்போட்டு கல்யாணம் கட்டிக் குடுத்துட்டுட்டம்முன்னா நம்ம கடமை முடிஞ்சிச்சி.

”இவளுக்கு அடுத்து மூத்தவந்தான,ஆம்பளப்பையதான அவனப் பத்தி பெருசா கவலைப்பட தேவையில்லை.அவன் கைய ஊனி கரணம் பாஞ்சிக்கிருவான். என சொல்லிமுடிக்கிற நாட்களிலும் அது அல்லாத நாட்களிலுமாய் அவளிடம் சொல்லிவிட்டுப்போவதுதான் இவனது வழக்கமாகிப் போகிறது.

அப்படியான நாட்களில் மாந்தோப்பு அக்கா சொன்னது நினைவில் வந்து போகும்.

“பின்னஎன்னடா மத்தமத்த வேலைகளுக்கெல்லாம் அவ தயவும் தொணை யும் வேணும் ஒனக்கு.,எல்லாத்துக்கும் தயவு செய்து நிப்பா வீட்டுல,ஒனக்கு பொண்டாட்டியா ,ஓங் புள்ளைகளுக்கு அம்மாவா,அவ பொறந்த வீட்டுல பொண்ணா,சொந்தக்காரங்களுக்குமகளா,மதினியா,அக்காவா,தங்கச்சியாஇப்பிடி எல்லாமுமா,,,,இருக்குறவள சொந்த யெடத்துல இருந்து புடுங்கி வேற யெடத் துல நட்ட நாத்தா ஓங்கையில குடுத்து ஒனக்கு பொண்டாட்டியாவும்,ஓங் புள்ளைகளுக்கு தாயாவும் ஆகி நிக்குறா இல்ல,அவளகொஞ்சமாச்சும் மனுசி மாதிரி நடத்த முயற்சி பண்ணு,என்னமோ வீட்டுல இருக்குற பீரோ, கட்டிலு, மிக்ஸி கிரைண்டரு மாதிரி,,,,ஒரு பொருளா வச்சிக்கிட்டா எப்பிடி சொல்லு,

“ஏதோ ஒரு ஆத்திர அவசரத்துல அவள கவனிக்க முடியமையோ இல்ல மறந்து போறதோ இயல்புதான்,அதுக்காக எந்நேரமும் அவள கவனிக்க முடி யாம நான் பிஸியாவே இருக்கேன்னு சொல்றதும் அப்பிடி காட்டிக்கிறதும் கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம் பாத்துக்க,

“ஒனக்கே ஒனக்கானவதானப்பா அவ,ஒன்னைய நம்பித்தானப்பா வந்துருக்கா, அவ ஓன் ஒடம்புலயும் உருருலயும் பாதிடா,ஒன்னைய விட்டா அவளுக்கு பெரிசா வேற யாருடா,பொறந்த வீடும் பெத்த புள்ளைங்களும் இருந்தாலும் கூட அவளுக்குன்னு சாய்ஞ்சிக்கிற இருக்குறது ஓங் தோள்தானடா அத மொதல்ல சரியா புரிஞ்சிக்கிறனும்,நீயி,

”ஒங்களுக்குள்ள எப்பிடின்னு எனக்கு தெரியாது.ஆனா ஒரு நா தற்செயலா என்னைய பாத்தப்ப பேசிக்கிட்டு இருந்தோம் கொஞ்ச நேரம்,அப்ப பேச்சுல இருந்து புரிஞ்சிக்க முடிஞ்சது இதுதான்.ஒரு வேளை நான் தப்பா புரிஞ்சிக் கிட்டேனோ என்னவோ தெரியல,சொல்லணும்ன்னு தோணுச்சி சொல்லீ ட் டேன்,அக்காவ தப்பா நெனைக்காத,மனசுல பட்டத சொல்லைன்னா எனக்கு தூக்கம் வராது .பாப்போம், அடுத்தடுத்த நாட்கள்ல ஓங் நடவடிக்கைய”எனச் சொன்னவளின் பேச்சை ஏற்று இப்பொழுதெல்லாம் எங்கு போனாலும் சொல் லிக் கொண்டுதான் செல்கிறான்.

திருமணமாகும் முன் அம்மாவிடம் அல்லது அக்காவிடம் இல்லையானால் அண்ணன் தம்பி யாரிடமாவது சொல்லிக்கொண்டுதான் கிளம்புவான்,அது இப்பொழுது வரை அது நீடிக்கிறதுதான்.

என்னஅம்மாவிடம் சொல்லிக் கொண்டு போகும் போது பாத்துப்போப்பா என்கி ற வார்த்தை இலவச இணைப்பாகக் கிடைக்கும், மற்றவர்களிடம் சொல்லிச் செல்கிற போது அது கிடைப்பதில்லை,

கிடைக்கா விட்டால் கூட பரவாயில்லை,மிதமிஞ்சிய அல்லது கொஞ்சமே யான கிண்டல் சுமந்தா வார்த்தை ஒன்று ஒட்டிக் கொண்டு வரும்.அதிலும் அக்கா செய்கிற குசும்பிற்கு அளவேயில்லை.

”என்னடா மதுரை ரோட்டுப் பக்கமா பாத்து போ ,நீயி போற சைக்கிளையும் ஒன்னையும் அவ அப்பன்காரன் பிரிச்சி காயலான் கடையில போட்டுறாம என்பாள்.

இது மூத்த அக்காள் என்றால் இளைய அக்கா பார்த்து மௌனம் சுமந்த வார்த்தைகளால் கண்ணடிப்பாள்.

பொதுவாக இருவரும் ஒன்று சேரமாட்டரகளே,இளைய அக்கா வட துருவம் என்றால் மூத்த அக்கா தென் துருவம்,இதில் எப்படி இருவர் கருத்தும்,,,,,?பேசி வைத்துக்கொண்டார்களோ,,?

இதை எல்லாம் பார்க்கிற அண்ணன் ”நீங்க என்ன அவன ரொம்பத்தான கிண் டல் பண்ணுறீங்க, என்ன அவனெல்லாம் காதல் பண்ணக்கூடாதா,,,?நாங்க என்ன விதிவில்லக்குலயா இருக்கோம். இதெல்லாம் ஆம்பளப்பச்சங்க சுதந்தி ரம், ஆமா ,நீங்களெல்லாம் இதுல ரொம்ப தலையிடக்கூடாது” என்பான்.

பின் நாட்களில் இவனுக்கு கல்யாணம் பேசிய போது இரண்டு அக்காக்களும் தான் அந்தப் பெண்னை பேசி முடித்து இவனுக்கு முடித்து வைத்தார்கள். அவர்கள் பேசி திருமணம் முடித்து வைக்கிற வரை இவனும் இவனது சைக் கிளும் பத்திரமாகவே இருந்தார்கள்.

அந்த சைக்கிளைத்தான் இப்பொழுது எக்ஸர் சைஸ் பண்ண ஓட்டிக் கொள்கி றான். பின்னே சைக்கிள் ஓட்டுவது இப்பொழுதெல்லாம் எக்ஸர்சைஸ் என்கிற அளவிற்கு சுருங்கிப் போனது.

திருமணத்திற்குமுன்பு இங்கிருந்து சாத்தூர வரை சைக்கிளில் பணிக்கு போய் திரும்பியிருக்கிறான்,ஆனால் இப்பொழுது பத்தடி தூரம் சைக்கிள் மிதிப்பதற்கு யோசனையாய் இருக்கிறது,.

”போடாபோடாபோக்கத்த பையலே என்பார் நண்பரும் சொந்தமுமான ஒருவர், சைக்கிள் மிதிக்கிறதுன்னா மிதிச்சி போ நீ வாட்டுக்கு,ஒன்னைய யாரும் கையப் புடிச்சிக்கிட்டா இருக்காங்க,இல்ல கால கட்டிப் போட்டுட்டாங்களா ,,,, போக வேண்டியதுதான நீ வாட்டுக்கு ,அதான் வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டு சைக்கிள் இருக்குதுல்ல, நானே இந்தவயசுல சைக்கிள் மிதிக்கிறேன் ஒனக்கு என்னப்பா, கொள்ளையா,”என்பார்,

அவர்சொன்ன படி சைக்கிள் மிதிக்கலாம் என முடிவு செய்துள்ளான் இப்பொ ழுது/

என்ன முன் தினம் இரவு தூங்கப்போகிற நேரமும் மறு நாள் காலை எழுந்தி ருக்கிற நேரமும் தாமதாய் ஆகிப் போகிறது.அதுவே சைக்கிளின் ஆர்வத்தை அமல்ப் படுத்த முடியாமல் போகிறது,

இல்லையென்றால் இது போலான நாட்களில் சைக்கிளில் பஜார் போய் விட்டு வரலாம். என்றெல்லாம் நினைப்பவன் மனைவியிடம் சொல்லிவிட்டு போக முடியாத நாட்களில் பையன்களிடம் சொல்லி விட்டுப் போவான்.

வீடும் வீடு சுமந்த நினைவுகளுமாய் சூழ்க்கொண்ட ஒரு விடுமுறை நாளின் மாலை நேரமாய் பஜாருக்குக்கிளம்புகிறான் மனைவியிடம் சொல்லிக் கொ ண்டு,,,/

Nov 5, 2017

நகர்வுகளின் நொடிகளில்,,,


போன வழி தூத்துக்கு சாலையாகவும் போய் சென்றடைந்த இடம் காதி வஸ் திராலயமாகவும் இருந்து,

தூத்துக்குடிசாலைஇங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலிருக்கும்,

கடக்கப்போகிற ஐந்து கிலோமீட்டர்களும் வெறும் காட்டுப்பாதையோ இல்லை வெறும் பிளாட்டான இடமோ இல்லை.

பெரிய பெரிய வீடுகளையும் கடையும் இன்னமும் இன்னமுமான பிற கட்டங் களையும் தன் இருபக்கமுமாய் அடைகொண்டு வைத்திருக்கிற சாலைகளில் பயணிக்க எப்பொழுதும் பிரியம் நிறைந்து இருக்கிறதுதான்.

இங்கிருந்து கலெக்டர் ஆபீஸ் வரையிலும் இங்கிருந்து சிவகாசி ரோடு வரை யிலும் சாத்தூர் ரோடு வரையிலுமாய் செல்கிற பாதையெங்கிலுமாய் இருக் கிறகட்டிடங்கள்புதிதுபுதிதான வண்ணங்கள் சுமந்தும் பளிச் காட்டியும் அழுக்கு சிலவைகளும்அழுக்கு சுமந்து இன்னும் சிலவைகளுடனுமாய் காட்சிப் படுகிற போது மனம் சில்லிட்டும் மகிழ்ந்தும் போகிறதுதான்.

அந்த மகிழ்வில் படக்கென பிடிபட்டுப்போகிற சந்தோஷம் மனமகிழ்ந்து சிறகு முளைக்கப் பண்ணி விடுகிறதுதான்.

தூரங்களெல்லாம் இப்போது தூரங்களாக அல்லாமல் பக்கத்தில் வந்து விட்ட நேரமிது,

தவிர தூரத்தை சுருக்கிட்டு பக்கத்தில் அழைத்து கக்கத்தில்வைத்துக்கொள்ள பிரயணத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறவர்களில் இவனும் ஒருவனாய்.

செல்கிற வழியெங்கிலுமாய் கண்ணுக்குள் உறுத்துகிற கட்டிடங்களுக்குள்ளா ய் சின்னதாய் அடைகொண்ட டீக்கடையில் நின்று டீக்குடித்துவிட்டும் நண்பர் க ளுடன் மொபலில் பேசி விட்டுமாய் செல்கிற போது தூரமும் அலுப்பும் தெரி வதில்லைதான்.இரு சக்கரவாகனம்தானே,வேகமாக சென்று விடலாம்,

இருசக்கர வாகனம் இவனிடம் இல்லாத காலங்களில் சைக்கிளில்தான் இவனது பயணம்எங்கு போனாலும்/

சைக்கிளை தூக்கி கைக்குள்ளாய் அடக்கி வைத்துக்கொண்டால் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு போய் விட்டு வரலாம் என்பது இவனது அரிச்சுவடியாய்இருந்தது.

சைக்கிளோடு சைக்கிளாய் சுற்றி வருவான், சைக்கிளை தூக்கி கக்கத்தில் வைத்துக் கொள்ளாத குறைதான்.

ஊரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் சைக்கிளில் வருகிற தூரங்களிலும் கூட அலுப்புப்பட்டுத் தெரிந்ததில்லை இவனுக்கு.

பழைய சைக்கிள் மிதிக்க நன்றாக இருக்கும்,அப்பொழுதெல்லாம் இவனது சைக்கிளின் உயர் மருத்துவர் ஆர் ஆர் சைக்கிள் கடைதான்,

அவர்தான் சொல்வார்,”சைக்கிள வாரத்துக்கு ஒருதடவை தொடைக்கணுங்கு றது வாஸ்தவம்தான்.அதுக்காக இப்பிடியா சைக்கிள்ல இருக்குற பெயிண்ட் போற அளவுக்கு தொடச்சி தேங்காய் எண்ணையில முக்கி எடுக்குறது அடுத்த வுங்க கண்ணு கெட்டுப் போற அளவுக்கு பளபளன்னு,,,,”/என்பார்.

அந்தளவுக்கு சைக்கிளை பிரியமாக வைத்திருந்தவன் கல்யாணத்திற்கப்புறம் தான் இரு சக்கர வாகனம் வாங்கினான்,முதலில் பழைய சைக்கிளை வாங்க லாம் என்பதுதான் இவனது நினைப்பு,

பின் வந்து நின்ற பழைய சைக்கிளையும் அதன் ரிப்பேருக்கு செலவழிக்கப் போகிற தொகையையும் ஒத்துப் பார்த்த போது புது சைக்கிளே வாங்கி விட லாம் என்கிற முடிவில் புது சைக்கிளே வாங்கி விட்டான்,

அதன்பின்புது சைக்கிள் கையில்இருக்கிற பிரியத்தில் வழக்கமாக பயணிக்கிற தூரத்தைவிட கொஞ்சம் பிரியம் சுமந்து எக்ஸெட்ராவாக நிறைய தூரம் சுற்றி வந்தான்,

அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டிய நேரத்திற்கு அரை மணி முன் கிளம்பிப் போய் அலுவலகத்திற்கு நேராக செல்லும் பாதையை விடுத்து சுற்றிச் செல் வான்.

பின் அலுவலகத்திற்கு போன பின்னாயும் அலுவலகம் ஆரம்பிக்க கொஞ்சம் நேரம் இருந்தால் அப்படியே சைக்கிளில் வலம் ஒரு ரவுண்ட் வருவான்.

சரி காலையில்தான் அப்படி என்றால் அலுவலகம் முடிந்த பின்னும் சிறிது நேரம்வலம் வருவான் எப்படியும் ஐந்து அல்லது ஏழு கிலோ மீட்டர்கள் என்பது இவனது கணக்கு.

வேகமாகவும் மூச்சு இறைக்க இறைக்கவுமாயும் சைக்கிளில் சுற்றி வருகிற வேலையை ஒரு யாகம் போலவே செய்வான். கணக்கு வழக்குடனும் நேரம் காலத்துடனும்/அது நல்லஎக்ஸர்சைஸ் என எண்ணி,/

அந்த எண்ணம் முதன் முதலாய் அறிவானந்தம் டாக்டரால் நிறுத்தப்பட்டது. அவர்தான் சொன்னார்,

”சார் சின்னதா ஒரு லூனாவாவது வாங்கிக்கங்க, இப்பிடி யே சைக்கிள் சைக் கிள்ன்னு இருந்துங்கின்னா கால் வழி வரத்தான் செய்யும் எக்ஸர்சைஸ்ங்கு றது நல்ல விஷயம்தான்.,ஆனா அத விட நல்ல விஷயம், நம்ம உடல் நலத் தையும் பாதுகாக்குறதுங்குறது முக்கியம் தெரிஞ்சிக்கங்க” என்றார் கொஞ்சம் கடுமையாக/

”நீங்க பொதுவா எல்லோரையும் போல நாங்க சொல்றத ஏத்துக்கிட்டு அப்பி டியேசெய்யிற ஆளில்லைதான்,உங்களுக்குன்னு தனி யோசனை, தனி ஏற்றுக் கொள்ளல் தனி மன ஒப்புதல் என தனித்தனியா இருக்கும்,அது படி தர்க்கங் கள்ல விழுந்தெந்திரிச்சி அப்புறம்தான் நாங்க தர்ற மருந்தையே சாப்பிடுவீ ங்க, இல்ல நாங்க சொல்றதையே ஏத்துக்கீவீங்க,,” என்றார் முழங்கால் வலி என போய் நின்ற போது/

காதி வஸ்திராலத்திற்குள்ளாய் நுழையும் முன்னாய் வெளியில் வண்டியை நிறுத்தி விட்டு நின்ற போது சக்கரபாணி ஓடி வந்து வாங்க சார்,வாங்க சார் என்றான்,

சக்கரபாணி. மிகவும் பிரியம் சுமந்தவன் ,அவன்அங்குதான்வேலை பார்க்கிறா ன்,பார்க்கிறசமயங்களிலெல்லாம் அவன் பேசுகிற பேச்சும் சொல்லிச் செல்கிற வணக்கமும் காட்டுகிற பிரியமும் ஒரு வாஞ்சை மிகுந்தே காணப்படுவதாய் இருக்கும்,

”என்ன சார் எப்பிடி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா,வீட்ல அக்கா புள்ளைங்க எல்லாம் சௌக்கியமா”,,,,,, என்பான்,

அவன் சொல்கிற அக்காவும் பிள்ளைகளும் இவனது மனைவியும் மகன் களும் ஆவார்கள்,இத்தனைக்கும் அவன் இவனது மனைவி மக்களை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை.

கேட்டு வைப்பதுதானே இப்படியெல்லாம் என ஒப்புக்கும் அவனது பேச்சு இருக்காது,அவனது பேச்சில் கேள்வியில் ஒரு ஒட்டுதலும் மிதமிஞ்சிப் போன வாஞ்சையும் இருப்பதை எல்லோராலும் உணர முடியும்.

அவன் போட்டிருக்கிற சட்டையும் பேண்டும்எப்பொழுதும்ஒருஅப்பாவித்தனம் சுமந்தும் படோடபமற்றுமாய் காணப்படும்,

ஏன் கண்ணு,,,,,(இவன் அப்பிடித்தான் அவனை கூப்பிடுவதுண்டு)வேலைக்கு வந்துட்ட நல்லதா ரெண்டு பேண்டு சட்டை எடுத்து போட்டுக்கிர வேண்டியது தான எனக்கேட்ட போது அவன் சொல்கிறான்,

“எங்க சார் ஒவ்வொரு மாசமும் சம்பளம் வாங்கும் போதும் நெனைக்கிறது தான்,ஆனா வீட்ல இருக்குற தம்பி தங்கச்சி அம்மாவை நெனைக்கிற போது ஏங் தேவை தள்ளிப் போயிரும் சார்”

ஏங் வீட்ல யாரும் வேலைக்குப் போறதில்லையா, ஓங் ஒருத்தன் சம்பாத்திய ந்தானா எனக் கேட்கிற சமயங்களில் இல்ல சார்,அப்பா கூலி வேலை பாக்கு றாரு, அம்மா ஒடம்புக்கு முடியாதவுங்க,தம்பியும் தங்கச்சியும் படிக்கிறாங்க, தம்பி நாலாவது வகுப்பு,தங்கச்சி அஞ்சாவது வகுப்பு .தம்பிக்கு மூத்தவ,,,,எப்ப வேணாலும்குத்தவச்சிறுவா,அவளுக்குன்னுஅப்பாசம்பாத்தியத்துலகொஞ்சம்  ஒதுக்கீருவாரு குடும்பத் தேவைக்குப் போக,,,,,/

அது போக அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவு தம்பி தங்கச்சிக்கு படிப்புன்னு ஆகுற செலவுகள ஈடு செய்யிறது ஏங் சம்பாதியமும், அம்மா அந்த முடியாத ஒடம்போட போயிட்டு வர்ற காட்டு வேலை சம்பாத்தியமும்தான்.

நல்லாகெதியானஒடம்போடஇருக்குறவுங்களுக்கேவேலை கெடக்காத இந்தக் காலத்துல இவுங்கள வேலைக்கு கூப்புடுறது அபூர்வம்தான்,அதுவும் காட்டு வேலைக்கு கூப்புடுறதுங்குறது அபூர்வத்துலயும் அபூர்வம்/

இதையும்மீறிஆள்க பழக்கத்துனால வாரத்துக்கு ஒரு நா ரெண்டு நாள் கெடை க்கிற வேலையவும் விடமாட்டாங்க,கேட்டா அதுல வர்ற அஞ்சி பத்து வருமானத்த ஏங் விடணும்ன்னுவாங்க, சரின்னு நானும் ஒண்ணும் சொல்ற தில்ல,ஒரு நா எல்லாரும் தூங்கிப்போன பின்னாடி ராவுல சாப்பாடு எடுத்து வைக்கும் போது கேட்டாங்க,

“ஏந்தம்பி நீ வேலை பாக்குற யெடத்துல எனக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்த விசாரிச்சி சொல்லுன்னாங்க,எனக்கு கண்ணீரே வந்துருச்சி, கண்ணீ ரோட என்னையப்பாத்த அம்மாவும் கண்ணுல தண்ணி வழியவிடவும் எனக்கு ரொம்பசங்கடமா போச்சி,என்ன செய்ய பின்ன,அப்பிடியே ஒண்ணும் சொல்லா தவனா தலைய குனிஞ்சிக்கிட்டே சாப்பிட்டேன்,

”என்ன செய்ய சொல்றீங்க சார் வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்துல இதெ ல்லாம் அன்றாட நிகழ்வுகளாகிப்போகுதுதான் சார்”,என்றான் சிரித்துக் கொண் டே./

இது போலான சிரிப்பை அனுதினமும் அணிகொண்ட அவனது பேச்சு ஆடை களின் ஏழ்மையை மூழ்கடித்து மேழெழுந்து வரும் ஒன்றாகவும் ஒட்டுதலு டனுமாய்/

இவன்கூட பல சமயங்களில் நினைப்பதுண்டு,அவனது இது போலான செயல் களுக்கு எப்படி,என்ன கைமாறு செய்ய முடியும் என,,,பதிலுக்கு இது போலான அன்பை அவன் மீது செலுத்தி விட முடியாது,

அது இவனுக்குத் தெரிவதில் லை அல்லது வருவதில்லை.இவனுக்கு மட்டு மில்லை இவனைப் போல் இருக்கிற பலருக்கும் வருவதில்லை,

வருமானம்,பட்ஜெட்,மாதச்செலவு,இதர இதரவான தணைக்கடன்கள் அடைப் பது, சீட்டுப்பணம்,வங்கி பேலன்ஸ் போன்ற இதர இதரவற்றில் மட்டுமே இருக்கிற கவனமும் அக்கறையும் இது போன்றவற்றில் கவனம் கொள்ளச் செய்ய மறு த்து விடுகிறது அல்லது மறத்துப் போகச் செய்து விடுகிறது,

”கூறு கெட்ட மாடு ஏழு கட்டு புல்லுத்தின்ன கதையா,,,, ”என்பார்கள் இவனது ஊரில்,

ஊரில் வளர்கிற வரையும் வாழ்கிற வரையும் இருப்புக் கொண்ட வரையுமாய் நன்றாகவும் புடம் போடப்பட்டவனாகவுமாய் இருந்தான்.

பணி வேண்டியும் அது கிடைத்ததுமாய் நகரத்தில் இவன் ஊனுதல் ஆரம் பித்த நாளிலிருந்து இவன் இது போலாய் கரடு தட்டுப் போனதாய் நண்பன் அடிக்கடி சொல்வதுண்டு,

பதிலுக்குஇவன்”நான்மட்டுமா என்னையப்போல இருக்குற பலபேரும் இப்பிடி த் தான் ஆகிப்போனதா அறியிறேன், நல்ல சாப்பாடா நல்லா சாப்பிட்டு பெரிசா ஏப்பம் விட்டு நல்லதா உடுத்தி கண்ணுக்கு லட்சணமா வீடு கட்டி டூ வீலர் காருன்னு இன்னும் இன்னுமான இதர இதர ஆடம்பரங்களிலும் படோடோ பங்கலுமா லயிச்சிப்போற மனசு பக்கத்துல இருக்குற அப்பாவிகளப் பத்தி அறியிறதில்ல. இல்ல வீண் பிடிவாதம் காட்டி அறிஞ்சிக்கிற விரும்பு றதில்ல” என சக்கரபாணியை பார்க்கிற ஒவ்வொரு கணமும் இவனுக்குள்ளாய் எழுந்த முங்குற நினைவுகள் யாரை கை கட்டி இழுத்து வர உதவும் அந்தக் கணங் களில் எனத் தெரிவதில்லை.

அப்படியே தெரிந்தாலும் கூட அவனை சுட்டிக்காட்டி நீ வா அவன் உயரத்திற்கு என சொல்லிவிட முடியாது இல்லை சொல்லி விடப் போவதும் இல் லை இவன்.

முதலில் அவனுடன் பழகுகிற தகுதியைப் பெற வேண்டும் அல்லது அவனது உயரத்திற்கு இவனை வளர்துக்கொள்ளமுயற்சி செய்ய வேண்டும் , பின்தான் எல்லாமும்.

பின் என்ன சார்,இவனுடன் மட்டுமல்ல ,பார்க்கும் எல்லோரிடமும் எல்லா சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு ஒட்டுதலாகவும் சமாளிப்பாகவும் சகித்து மாய் பேசியும் உறவாடியும் மனம் விடவுமாய் முடிகிறது அந்த சக்கரபாணி யால்,,,/என்கிற கேள்விக்குறி தாங்கிய ஆச்சரியம் இருக்கும் இவனிடம்.

அவன் வேலை பார்க்கிற கடையின் முதலாளி சொல்வார்,”டேய் ஒன்னையப் போல நாலு பேரு இருந்தா போதும்டா நான் ஏங் கடையே வாரத்த எங்கயோ கொண்டு போயிருவேண்டா” என,,,/

அதற்கு அவன் தலையை குனிந்து சிரித்துக்கொண்டே சொல்வான் மென் மை யாக/ ”இல்ல சார் நான் எப்பவும் போலதான் இருக்குறேன் சார்,இதுதான் ஏங் இயல்பு,எங்க ஊர்ல இப்பிடித்தான் இருப்பேன் சார்,ஒங்களுக்குத்தான் இது என்னமோ பெரிய ஆச்சரியமா தெரியுது”,

”நான் எப்பவும் போல இப்பிடியே இருந்துட்டுப் போறேன் சார், என்னோட இயல்போட,நான் மட்டுமில்ல என்னைய மாதிரி வெள்ளந்தியான பையலுக பொண்ணுங்க இதுபோலான கடைகள்லயும், வியாபார நிறுவனங்கள்லயும் கௌவர்மெண்ட் ஆபீசுலயும் வேலையில இருக்காங்க,அவுங்களோட இந்த மனசு விரிஞ்ச தன்மையையும் வெள்ளந்தித்தனத்தையும் பலபேரு இளிச்ச வாய்த்தனமாப் புறிச்சிக்கிறவும் எடுத்துக்கிறவும் செய்யிறாங்களே தவிர்த்து நல்லவிதமா புரிஞ்சிக்கிறவுங்க ரொம்பக்கொஞ்சம் பேருதான்,அந்தக்கொ றை ச்சலுல நீங்களும் ஒருத்தரு சார்” என்பான் இவனிடம்பேசுகிற சமயங்களில் எப்பொழுதாவது,,,,,/

தூத்துக்குடி சாலையை எட்டிப்பிடித்து அடைவதென்றாலோ அதன் மேனி மீது ஊர்வதென்றாலோ மேம்பாலத்தின் மீதுதான் வர வேண்டும்

அப்படித்தான் வந்தார் சக்கரபாணியின் அப்பா,,,/

மேம்பாலம் வழி கொஞ்சம் சுத்து என்றாலும் வேகமாக போய்விட்டு வந்து விடத் தோதாய் இருக்கிறது,இல்லையென்றால் காட்டுப்பாதை வழியாக குறு க்கு வழியில் வரவேண்டும்.டூ வீலர் வருவதற்கு மட்டுமே கத்தரித்து விட்டது போல அளவாக இருக்கும் வால் போல் நீண்டு,

அதன் வழியாகதான் அன்றாடம் டவுனுக்கு வந்து போகிறார் சக்கரபாணியின் அப்பா .

அன்றும் பக்கத்து வீட்டு பெண்ணின் கல்யாண வேலையாக டவுனுக்கு வந்த வர் சக்கர பாணியை பார்த்து விட்டும் வேலை முடிந்து திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் போது பாலத்தின் இறக்கத்தில் இறங்கும் போது பக்கவாட் டாக வந்த லாரிக்காரன் இவருக்கு ஹாரன் கொடுத்து விட்டு ஒதுங்கியி ருக்கிறான் அதே வேகத்திலும் அவர் வண்டியை ஓரம் கட்டிவிடுவார் என்கிற நம்பிக் கை யிலுமாய்,

படக்கென வந்த ஹாரன் சப்தத்தை எதிர்பார்க்காதவர் வண்டியை சைடில் ஒதுக்க ஹேண்டில் பாரை திருப்பியிருக்கிறார்,இடது பக்க ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த சில்வர் வாளி அந்தத் திருப்புதலுக்கு இடைஞ்சலாய் இருக்க சக்கரபாணியின் அப்பா டூ வீலரை ஓரம் கட்டுவார் என்கிற நம்பிக்கையில் லாரியை சைடாக ஓட்டிய டிரைவர் வண்டி மீது இடித்து விட்டார்,

இடித்த வேகத்தில் வண்டியை பிரேக்கடித்து நிறுத்திவிட்டும் கூட பின்னால் வந்த கனரக லாரி ஒன்று வேகத்தைகட்டுப்படுத்தியும் முடியாமல் முன்னால் நின்ற லாரியின் மேல் இடிக்க அது முன்னகர்ந்து டூவீலரிலிருந்து நிலை குலைந்து விழுந்து கிடந்தவரின் மீது ஏறி விடுகிறது.

பாவம் உடல் நசுங்கி இறந்து போகிறார் அந்த இடத்திலேயே/

அவர் இறந்த பிறகு இன்று சக்கரபாணியை பார்த்து பேசிவிட்டும் காதி வஸ்த ராலத்திற்குள்ளாய் போய்விட்டுமாய் வருகிறான்.